/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் 30ம் தேதி பரமபத வாசல் திறப்பு
/
ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் 30ம் தேதி பரமபத வாசல் திறப்பு
ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் 30ம் தேதி பரமபத வாசல் திறப்பு
ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் 30ம் தேதி பரமபத வாசல் திறப்பு
ADDED : டிச 24, 2025 05:54 AM
திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழாவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி, 30ம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பூர் ஸ்ரீகனகவல்லி, பூமதேவி சமேத வீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியுள்ளது. கடந்த, 20ம் தேதி முதல், திருமொழி திருநாள் எனப்படும், பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி, 30ம் தேதி நடக்க உள்ளது.
வரும், 29ம் தேதி நம்பெருமாள், மோகனி அலங்காரத்தில், ஸ்ரீநாச்சியார் திருக்கோலத்துடன் திருவீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளார்; அன்றுடன், பகல் பத்து உற்சவம் நிறைவு பெறுகிறது. வரும், 30ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு, மகா திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளும் நம்பெருமாள், பரமபத வாசல் வழியாக சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். காலை, 10:45 மணிக்கு, கருடசேவை திருவீதியுலாவும், இரவு, 8:00 மணிக்கு, இரவு பத்து உற்சவமும் நடக்க உள்ளது. அன்று இரவு, 10:00 மணி வரை, பரமபத வாசல் திறந்திருக்கும்.
பக்தர்கள் வசதிக்காக, 30ம் தேதி துவங்கி, ஜன., 8 ம் தேதி வரை (6ம் தேதி நீங்கலாக), தினமும் மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பரமபத வாசல் திறந்திருக்கும். தொடர்ந்து, ஜன. 8ம் தேதி திருவாய்மொழி திருநாள் சாற்றுமுறையும், ஆழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன், இரவு பத்து உற்சவம் நிறைவு பெறும். வரும், ஜன., 11ல், கூடாரை வெல்லும் உற்சவமும், அன்று மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆருத்ரா தரிசனம்
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீமாணிக்கவாசகர் திருவெம்பாவை உற்சவம், நாளை (25 ம் தேதி) துவங்குகிறது. வரும், ஜன., 1 ம் தேதி வரை, தினமும் இரவு, 7:00 மணிக்கு, மாணிக்காசகர் திருவெம்பாவை உற்சவம் நடைபெறும். ஸ்ரீநடராஜர் - சிவகாமியம்மன் முன்பாக, திருவெம்பாவை பதிகம் பாராயணம் செய்து, தீபாராதனை செய்து வழிபாடு நடக்கும். வரும், ஜன. 2ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், வரும், 3ம் தேதி, ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

