/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு பிரச்னைக்கு தீர்வு இன்னொரு பிரச்னையா?
/
ஒரு பிரச்னைக்கு தீர்வு இன்னொரு பிரச்னையா?
ADDED : டிச 16, 2025 07:29 AM
திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பது தொடர்ந்து வருகிறது. இதனால், வயதானோர் மூச்சு விட முடியாமலும், சுற்றுச்சூழல் சீர்கேட்டாலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் முறையாக அகற்றப்பட முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திக்குமுக்காடி வருகிறது. குப்பை கொட்டும் விவகாரத்தில் கோர்ட், பொதுமக்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு உள்ள நிலையில், நகரில் பல இடங்களில் மலை போல் குப்பை தேங்கியுள்ளது. நாள் கணக்கில் எடுக்கப்படாமல் கடும் துர்நாற்றத்துடன், சுகாதார கேடாக காட்சியளித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பது நிகழ்வு தொடர்ந்து வருகிறது. கே.செட்டிபாளையம், முதலிபாளையம் என ஒவ்வொரு இடத்திலும் நடக்கிறது. நேற்று பிரிட்ஜ்வே காலனியில் ரயில்வே தண்டவாளத்தையொட்டி செல்லும் ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பைக்கு யாரோ தீ வைத்து சென்றனர். இதேபோல, சில இடங்களிலும் குப்பைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வைக்கப்பட்ட தீயால் புகை மண்டலமாக அப்பகுதியானது. தகவலறிந்து சென்ற திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். விரைவாக தீ அணைக்கப்பட்டதால், குடியிருப்பு பகுதிக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. குப்பைக்கு தீ வைப்பு நிகழ்வு தொடர்ந்து வருகிறது. இதில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் பொதுமக்கள், ஒரு பிரச்னைக்கு இன்னொரு பிரச்னை தீர்வாகாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

