/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இட்லி மாவு தயாரிப்பு நிறுவனத்துக்கு 'சீல்'
/
இட்லி மாவு தயாரிப்பு நிறுவனத்துக்கு 'சீல்'
ADDED : டிச 21, 2025 05:54 AM

திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இட்லி மாவு தயாரித்து, பேக் செய்து விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் வழங்கல் துறையினர் குறிப்பிட்ட நிறுவனத்தில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அந்நிறுவனத்தில், 2,500 கிலோ எடையுள்ள 53 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. நியூ சீனிவாசா இட்லி மாவு என்ற பெயரில், ஆர்.கே. புட்ஸ் என்ற முகவரியுடன், உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் எண்ணுடன் இட்லி மாவு தயாரித்து விற்பனைக்கு தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.
ஆய்வு நடத்திய அதிகாரிகள் அங்கிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இரண்டு மொபட்களையும் பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இதில், ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன், 34, அறந்தாங்கியைச் சேர்ந்த நீலகண்டன், 49 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து அந்நிறுவனத்துக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி வைத்து, இட்லி மாவு தயாரித்து, பேக் செய்து விற்பனை செய்யப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாவு பாக்கெட்கள் ஆங்காங்கே உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும், இரவு நேர பிளாட்பார கடைகளுக்கும் இந்த மாவு வகைகள் பெருமளவு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

