/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீரில் குளோரின் அளவு ஊராட்சிகளில் பரிசோதனை
/
குடிநீரில் குளோரின் அளவு ஊராட்சிகளில் பரிசோதனை
ADDED : பிப் 18, 2024 11:53 PM
உடுமலை;முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் வினியோகிக்கப்படும் குடிநீரில், குளோரின் அளவை சரிவர பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோடை துவங்க உள்ள நிலையில், மாசடைந்த தண்ணீரால் வயிற்றுப்போக்கு, காலரா, காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. இதனைத்தடுக்க, பல பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை பரிசோதனை செய்ய, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சுகாதார அலுவலர், ஊராட்சி துப்புரவு அலுவலர், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆகியோர் நேரடியாக, அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:
ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் 0.2 பிபிஎம் முதல், 0.5 பிபிஎம் அளவில் குளோரின் இருப்பதை உறுதி செய்யவும், குளோரின் அளவு குறைந்தால், துறை ரீதியான உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
குளோரின் குறைவாக உள்ள பகுதிகளில், அதனை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

