/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறவழியில் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு
/
அறவழியில் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு
ADDED : டிச 24, 2025 07:06 AM
பல்லடம்: குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ஜாமினில் வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்ததற்கு, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் (அ.தி.மு.க.) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் கிராமத்தின் இயற்கை வளத்தை கெடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில், அப்பகுதி மக்கள், மாநகராட்சி பகுதியின் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்டி வருகின்றனர்.
குப்பைகளால், எங்களது வாழ்வாதாரம் பறிபோவதுடன், கடுமையான சுகாதார சீர்கேடு, நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே, பொதுமக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீர்வு காண முயற்சிக்காமல், போலீசாரை கொண்டு பலப்பிரயோகம் செய்து, தாய்மார்கள் மீது கடுமையாக நடந்து கொண்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மீது, ஜாமினில் வெளியே வர முடியாத வகையிலான பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். திடக்கழிவு மேலாண்மையில் தோல்வியடைந்த திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், ஊழல்களை மறைப்பதற்காகவே இது போன்று பொதுமக்களை இம்சிக்கும் வேலைகளை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

