ADDED : அக் 07, 2024 01:23 AM

திருப்பூர் : அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் காங்கயம் தொகுதிகளில், நாளை மனித சங்கிலி போராட்டம் நடக்க உள்ளது. மனிதசங்கிலி போராட்டம் நடத்துதல்; கட்சி ஆண்டு விழா கொண்டாட்டம்; உறுப்பினர் அட்டை வினியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாநில இணைச்செயலாளர் குணசேகரன், எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், அடையாள அட்டை வினியோகம் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், நாளை நடக்க உள்ள, மனிதசங்கிலி போராட்ட ஏற்பாடுகள் குறித்து, பகுதி வாரியாக கேட்டறிந்தார்.
ஒவ்வொரு வார்டு கிளை அளவில், மனித சங்கிலி போராட்டம் நடத்த வேண்டும். பாதிப்புகளை மக்களுக்கு விளக்கி, அவர்களையும் போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். ஒவ்வொரு கிளை அளவில், அதிகப்படியான மக்களை திரட்டி, மனிதசங்கிலி போராட்டம் நடத்தி, அதுதொடர்பான வீடியோக்களை கட்சியில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

