/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமையை ஏற்படுத்த 14 வனங்கள் பல்லடத்தில் முன்மாதிரி ஊராட்சி!
/
பசுமையை ஏற்படுத்த 14 வனங்கள் பல்லடத்தில் முன்மாதிரி ஊராட்சி!
பசுமையை ஏற்படுத்த 14 வனங்கள் பல்லடத்தில் முன்மாதிரி ஊராட்சி!
பசுமையை ஏற்படுத்த 14 வனங்கள் பல்லடத்தில் முன்மாதிரி ஊராட்சி!
ADDED : நவ 16, 2025 12:20 AM

பல்லடம்: பல்லடம் அருகே, பசுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 14 வனங்கள் அமைத்து, கோடங்கிபாளையம் ஊராட்சி, முன்மாதிரி கிராமமாக உள்ளது
ரோடு விரிவாக்கம், குழாய் பதிப்பு, கட்டட கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளால், தினசரி, எண்ணற்ற மரங்கள் வெட்டப்படுகின்றன. புதிதாக நட்டு வளர்க்கப்படும் மரங்களைக் காட்டிலும், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளன. மக்கள் தொகைப் பெருக்கம், நகர விரிவாக்கம் உள்ளிட்ட பல காரணங்களால், மரங்கள் வெட்டப்படுவது அதிகரிக்கின்றன.
மரங்களை வளர்க்கவும், பசுமையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான், பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அவையும் பெயரளவுக்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இச்சூழலில், பசுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியாக, பல்லடம் அருகே, சிறிய கிராமமாக உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி, 14 பூங்காக்களை உருவாக்கி, முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கோடங்கிபாளையம் ஊராட்சியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், விசைத்தறி மற்றும் கல்குவாரி தொழில்கள் இங்கு பிரதானமாக உள்ளன. சிறந்த நிர்வாக செயல்பாடுகளுக்காக, சமீபத்தில், ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்றது. இவ்வாறு சிறந்து விளங்கும் இந்த ஊராட்சியில், 14 வனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஊராட்சிக்கு உட்பட்ட சங்கோதிபாளையம் கிராமத்தில், 5.5 ஏக்கர் பரப்பளவில் மகிழ்வனம் உள்ளது. இதில், 3,500 மரங்கள் வளர்க்கப்பட்டு, பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பூங்காவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், முத்தமிழ் வனம், பாரதி வனம், பகவதி வனம், ராச வனம் 1 மற்றும் 2, அமர வனம், தாய் மண் வனம், மங்கள விநாயகர் வனம், வேதாத்திரி வனம், அப்துல் கலாம் வனம், இளம் தளிர் வனம் 1 மற்றும் 2, சோமனூர் காந்தி பழனிசாமி வனம் என, 14 வனம் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், அரை ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள, 14 வனங்களிலும் சேர்த்து, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் இங்குள்ள மகிழ்வனம் பூங்காவை பார்வையிட்டு சென்றதுடன், சிறிய ஊராட்சியால் எப்படி இது சாத்தியம் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியும் உள்ளனர்.
ஒரு சிறிய ஊராட்சியால் இவ்வளவு மரங்களுடன் வனங்களை உருவாக்க முடியும் என்றால், நகரங்களில் உள்ள வருவாயை பயன்படுத்தினால், எத்தனையோ வனங்கள், பூங்காக்களை உருவாக்க முடியும். ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், இதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. மொத்தத்தில், பூங்காக்களால் உருவாக்கப்பட்டுள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி, திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டுமன்றி தமிழகத்துக்கே முன்மாதிரி கிராமமாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

