/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் பொருள் அனுப்பும் பணி எட்டு தொகுதிகளுக்கும் 'எட்டும்'
/
தேர்தல் பொருள் அனுப்பும் பணி எட்டு தொகுதிகளுக்கும் 'எட்டும்'
தேர்தல் பொருள் அனுப்பும் பணி எட்டு தொகுதிகளுக்கும் 'எட்டும்'
தேர்தல் பொருள் அனுப்பும் பணி எட்டு தொகுதிகளுக்கும் 'எட்டும்'
ADDED : ஏப் 02, 2024 11:31 PM

திருப்பூர்;வாக்காளர் விரலில் வைக்கப்படும் அழியாத மை பாட்டில் உட்பட அனைத்துவகையான தேர்தல் பொருட்களும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, வரும், 19ம் தேதி நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தந்த தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்து, அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து, ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள், திருப்பூருக்கு வந்துசேர்ந்துள்ளன. கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில், தொகுதிவாரியாக, தேர்தல் பொருட்களை பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது.
'புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி' 'தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்', ஓட்டுச்சாவடி அலுவலர் - 1, 2, 3; ஓட்டுச்சாவடிக்குள் செல்லும் வழி, வெளியேறும் வழிகளை குறிப்பிடும் பல்வேறு ஸ்டிக்கர்கள்.
வாக்காளர் பதிவு படிவம் (படிவம் 17ஏ), ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான டைரி, பூத் ஏஜென்ட்களுக்கான பேட்ஜ், பென்சில், ஸ்கேல், கவர்கள், குண்டூசி உள்பட ஸ்டேஷனரி பொருட்கள்; நுால் கண்டு, ரப்பர் ஸ்டாம்ப், மாதிரி ஓட்டுப்பதிவு படிவங்கள், கையேடுகள், வாக்காளர் விரலில் வைக்கப்படும் அழியாத மை.
ஓட்டுப்பதிவு செய்யும் இடத்தில் வைக்கப்படும் மறைவு அட்டை, ஓட்டுப்பதிவு முடிந்தபின் இ.வி.எம்., மெஷினில் வைக்கப்படும் பேப்பர் சீல், மெட்டல் சீல் என, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக, ஆறு பிரிவுகளில், 42 வகைகளில், 80 பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளிலும், அந்தந்த தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தேர்தல் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான எண்ணிக்கையில் பொருட்கள் பிரித்து வழங்கப்படும்.
ஓட்டுப்பதிவுக்கு முந்தையநாளில், தேர்தல் பொருட்கள் ஓட்டுச்சாவடிக்கு எடுத்துச்செல்லப்படும். ஓட்டுச்சாவடிக்கு எந்த ஒரு பொருட்களையும் விடுபடுதலின்றி அனுப்புவதற்காகவும், சரிபார்க்க ஏதுவாகவும், குண்டூசி முதலான அனைத்து தேர்தல் பொருட்கள் விவர பட்டியலையும் தேர்தல் பிரிவினர் கைவசம் வைத்துள்ளனர்.
தேர்தலில், ஏற்கனவே ஓட்டளித்த நபர், மீண்டும் கள்ள ஓட்டு பதிவு செய்வதை தடுப்பதற்காக, வாக்காளர் விரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடியில், வாக்காளர் விவரம் சரிபார்ப்புக்குப்பின், ஓட்டுச்சாவடி இரண்டாவது நிலை அலுவலர், வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைப்பார். லோக்சபா தேர்தலில் வாக்காளர் விரவில் வைப்பதற்கு தேவையான அழியாத மை பாட்டில்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து சேர்ந்தன. மற்ற பொருட்களோடு சேர்ந்து, மை பாட்டில்களும், அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

