ADDED : செப் 17, 2024 05:16 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் ஒன்றியம், காளிபாளையம் ஊராட்சி, காளிபாளையம் ஏ.டி., காலனி மக்கள் 27 பேருக்கு 2006ம் ஆண்டு அங்குள்ள வெங்கமேடு பகுதியில் குடியிருக்க தலா 2 சென்ட் வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கியது.
வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை. பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நடவடிக்கை இல்லை. விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளர் கிள்ளி வளவன், முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் தலைமையில் மக்கள் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக பாதிக்கப்பட்ட மக்கள் அறிவித்து இருந்தனர்.
நேற்று காலை பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தின் முன் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி தாசில்தார் சந்திரசேகர், பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு மாதத்தில் உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.என உறுதி கூறினார்.அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

