/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன வெங்காயத்துக்கு விலை இல்லாததால் வேதனை
/
சின்ன வெங்காயத்துக்கு விலை இல்லாததால் வேதனை
ADDED : ஜூலை 13, 2024 01:05 AM
உடுமலை;வைகாசி பட்டத்தில் கணிசமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர். தண்ணீர் பற்றாக்குறையால் இந்த ஆண்டு வழக்கத்தை விட சாகுபடி பரப்பு மிகவும் குறைந்தது.
வைகாசியில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விரைவில் அறுவடை துவங்கவுள்ளது. இந்த சீசனில் உற்பத்தி குறைந்து விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர். தற்போது மைசூரில் அறுவடை துவங்கி உள்ளது.
விலை எதிர்பார்த்த அளவு உயரவில்லை. சின்ன வெங்காயம் கிலோ, 30 முதல், 40 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்படுகிறது. விலை உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், விலை அதிகரித்தால் பெரும்பாலான மக்கள் மற்றும் வணிகர்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் பெல்லாரி வெங்காயத்தை வாங்கி பயன்படுத்த துவங்கி விடுகின்றனர்.
இதனால் சின்ன வெங்காயம் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு, அதிக வரி விதிக்கப்படுவதால் ஏற்றுமதியும் பாதித்துள்ளது. உற்பத்தி செலவு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் விற்பனை விலை சரிந்துள்ளது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றனர்.

