/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனி விவேக் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாள் இயங்கும்
/
இனி விவேக் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாள் இயங்கும்
ADDED : மார் 22, 2024 11:17 PM
திருப்பூர்;'கன்னியாகுமரி - திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் இனி வாரத்தின் ஐந்து நாட்கள் இயங்கும்,' என, தெற்கு ரயில்வே மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், புதன், வியாழன், சனி ஆகிய நான்கு நாட்கள் மாலை, 5:25 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் (எண்: 22503) திருவனந்தபுரம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வடமாநிலங்கள் வழியாக பயணித்து, நான்காம் நாள் இரவு, 8:50 மணிக்கு அசாம் மாநிலம், திப்ரூகர் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு இரவு, 7:55 மணிக்கு திப்ரூகரில் புறப்படும் ரயில், நான்காம் நாள் இரவு, 9:55 க்கு கன்னியாகுமரி வந்தடைகிறது.
நேற்று (22 ம் தேதி) முதல் இந்த ரயில் இனி வெள்ளிக்கிழமைகளில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் வெள்ளிக்கிழமை இரு மார்க்கத்திலும் ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டிப்பு ஏன்?
நாட்டின் மிக நீண்ட துாரம் பயணிக்க கூடிய ரயில்களில் விவேக் எக்ஸ்பிரஸ் குறிப்பிடத்தக்கது. ஒன்பது மாநிலங்கள் வழியாக, 4,273 கி.மீ துாரத்தை, 81 மணி நேரம் பயணித்து கடக்கிறது, இந்த ரயில். நாட்டின் வடக்கு எல்லையான அசாமையும், தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியும் இணைப்பதால், இந்த ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, நுாறு நாட்களுக்கு முன்பிருந்து பயணிகள் பலர் காத்திருக்கின்றனர்.
வாரத்தின் இரண்டு நாட்கள் இயங்கிய ரயில் இயக்கம், ஓராண்டுக்கு முன் நான்கு நாட்களாகவும், தற்போது, ஐந்து நாளாகவும் நீட்டிப்பு செய்ததற்கு, தொடர்ந்து அதிகரிக்கும் டிக்கெட் முன்பதிவே காரணம்.

