ADDED : ஆக 10, 2024 10:50 PM

பல்லடம்;மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில் கிரிவலப் பாதையில், தன்னார்வ அமைப்பின் சார்பில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்லடம் அருகிலுள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல்லடம் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், கிருத்திகை, பிரதோஷம், சதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட பல்வேறு விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
இதுதவிர, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உட்பட விழாக்களின் போது, தேரோட்டம் நடப்பதால், இந்நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், கரடு முரடாக உள்ள கிரிவலப் பாதையால், பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனையறிந்த, பசுமை பல்லடம் இயக்கத்தினர், கிரிவலப்பாதையை துார்வாரி வருகின்றனர்.
அதன் நிர்வாகிகள் கூறுகையில், 'பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லாத நிலை உள்ளது. மேலும், கரடு முரடான கிரிவலப் பாதையில் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். போதிய வாகன பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி கிரிவலம் செல்லவும் வேண்டி, துாய்மை செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது,' என்றனர்.

