/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு வங்கி சிதைந்தால் கலையும் கனவு
/
ஓட்டு வங்கி சிதைந்தால் கலையும் கனவு
ADDED : ஏப் 03, 2024 10:54 PM
திருப்பூர் : 'போன, அஞ்சு வருஷம் எதுவும் செய்யல...' இப்படியான பிரசாரத்துடன் தான், திருப்பூர் லோக்சபா தொகுதி 'சிட்டிங்' எம்.பி., சுப்பராயனுக்கு எதிராக, தேர்தல் களம் கண்டுள்ளன எதிர்க்கட்சிகள். 'போன அஞ்சு வருஷம், மத்திய அரசு தான் எதுவும் செய்யல; கொரோனா பாதிப்பால, ரெண்டு வருஷம், தொகுதி நிதியை கூட மத்திய அரசு ஒதுக்கல...' என்ற காரணத்தை முன்வைத்து பிரசாரம் செய்கிறார், எம்.பி., சுப்பராயன்.
தேர்தல் களத்தில், வழக்கமான இந்த 'வார்த்தை போர்', வாக்காளர்களை எந்தளவு சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை, தேர்தல் முடிவு தான் வெளிப்படுத்தும். தொழில் துறை சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம்; நுால் விலை, பஞ்சு விலை உள்ளிட்ட கோரிக்கைகள், தேர்தலில் எதிெராலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு வங்கியில் குறி
திருப்பூர் தொகுதியில் களம் கண்டுள்ள இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன், அந்தியூர், திருப்பூர் தெற்கு மற்றும் கோபி சட்டசபை தொகுதிகளை குறி வைத்து, களம் காண்கிறார். அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம், திருப்பூர் மாநகருக்கு புதியவர் என்றாலும், பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் செல்வாக்குடையவர் என்பதால், அங்குள்ள ஓட்டு வங்கியை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்ய முனைப்புக் காட்டுகிறார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம், நலிந்துள்ள பனியன் தொழில் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்துள்ளார். அ.தி.மு.க., என்ற கட்சியும், இரட்டை இலை என்ற சின்னமும் அவருக்கு கூடுதல் பலம். அதே போன்று, பவானி பகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு, கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
பலமான பாலம்
பா.ஜ., வேட்பாளரை பொறுத்தவரை, கட்சியின் மாநில பொது செயலராக உள்ள முருகானந்தம் களம் காண்பது, முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ''மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்; திருப்பூர் தொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை மிக எளிதாக, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கும் பலமான பாலமாக தன்னால் செயல்பட முடியும்' என்பது, அவரது பிரசாரம்.
'அதிகாரம் கையில் இருந்தால், சொந்த தொகுதியாக இருந்தால் என்ன? எந்த தொகுதியாக இருந்தால் என்ன? மக்களுக்கு நல்லது செய்ய முடியும்' என்ற பாணியில், முருகானந்தம் பிரசாரம் செய்து வருகிறார்.
அதிருப்தி ஓட்டுகள்
கடந்த லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில் 'எந்த கட்சிக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்ற மனநிலையில் உள்ள வாக்காளர்களுக்கான 'நோட்டா'வுக்கு, 21 ஆயிரத்து 861 ஓட்டுகள் கிடைத்தன. இந்த அதிருப்தி ஓட்டுகளை அறுவடை செய்வது யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஓட்டு வங்கியில் குறிவைத்து வேட்பாளர்கள் களமிறங்கினாலும், அது நிலையான ஓட்டு வங்கியா, தற்போதுள்ள பிரச்னைக்கு ஏற்ற வகையில் ஓட்டு வங்கி மாறுமா என்பதெல்லாம் தேர்தலுக்குத் தேர்தல் மாறும்; இத்தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஓட்டு வங்கி கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

