/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடர் வனமாகும் அமராவதி பூங்கா! பராமரிப்பில்லாமல் சிதைந்து வரும் கட்டுமானங்கள் வசூலில் மட்டும் கவனம் செலுத்தும் பொதுப்பணித்துறை
/
அடர் வனமாகும் அமராவதி பூங்கா! பராமரிப்பில்லாமல் சிதைந்து வரும் கட்டுமானங்கள் வசூலில் மட்டும் கவனம் செலுத்தும் பொதுப்பணித்துறை
அடர் வனமாகும் அமராவதி பூங்கா! பராமரிப்பில்லாமல் சிதைந்து வரும் கட்டுமானங்கள் வசூலில் மட்டும் கவனம் செலுத்தும் பொதுப்பணித்துறை
அடர் வனமாகும் அமராவதி பூங்கா! பராமரிப்பில்லாமல் சிதைந்து வரும் கட்டுமானங்கள் வசூலில் மட்டும் கவனம் செலுத்தும் பொதுப்பணித்துறை
ADDED : நவ 22, 2024 10:54 PM

உடுமலை: உடுமலை அமராவதி அணை பூங்கா பராமரிப்பு இல்லாமல், கட்டுமானங்கள் சிதிலமடைந்தும், புதர் மண்டியும், சுற்றுலா பயணியருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, வனத்துறை முதலை பண்ணை, மலை வாழ் மக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்யும் 'எகே ஷாப்', வனப்பகுதி, படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.
ஒரு காலத்தில், சுற்றுலா பயணியர் ரசிக்கும் வகையில், அணையின் கரை பகுதியில், 1,200 மீட்டர் நீளம், 450 மீட்டர் அகலத்தில், 40 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பூங்கா அமைந்திருந்தது.
பல செயற்கை நீரூற்றுக்கள், நடை பாதை, புற்கள், வண்ண செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமை குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் என, 40 ஏக்கர் பரப்பளவில் இப்பூங்கா அமைந்துள்ளது.
அதே போல், அணையின் எதிர்புறம், 10 ஏக்கர் பரப்பளவில், 300 மீட்டர் நீளம், 200 மீட்டர் அகலத்தில், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, அரிய வகை பறவைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங்குகள் தனித்தனி அறைகளிலும், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்காவும் இருந்தன.
மேலும், பூங்காவில், புலி, மான், காளை என சிலைகள் மற்றும் செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என, சுற்றுலா பயணியரை கவரும் ஏராளமான அம்சங்கள் இருந்தன.
அதிகாரிகள் அலட்சியம்
அணை பூங்காவை பராமரிப்பதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, உயிரியல் பூங்கா முழுவதும் சிதிலமடைந்துள்ளது.
இங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள், அவற்றின் உபகரணங்கள் சிதிலமடைந்தும், மின் விளக்குகள் மாயமாகியும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது. அதோடு, பல அடி உயரத்திற்கு முட்புதர்கள், செடி, கொடிகள் முளைத்து, அலங்கோலமாக மாறியுள்ளது. சுற்றிலும் அமைக்கப்பட்ட கம்பி வேலிகள், அழகான துாண்கள் அனைத்தும் வீணாகி, ஆபத்தான நிலையில் உள்ளது.
அதிகாரிகள் அலட்சியத்தால், அணைப்பூங்கா முழுவதும் அடர்ந்த வனப்பகுதி போல் மாறியுள்ளதால், பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து, சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது.
அங்கு குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை, வாகனங்கள் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டிருந்த நிலம் உள்ளிட்டவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அணை மற்றும் அணைப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணியர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு, நீர் வளத்துறை சார்பில், நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு நபருக்கு, 10 ரூபாய் நுழைவு கட்டணம் மற்றும் வாகனங்களுக்கு, 20 முதல், 50 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை சுற்றுலா பயணியரிடமிருந்து, இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நுழைவு கட்டணம் மட்டுமின்றி, ஆண்டு தோறும் அணை பராமரிப்பு மற்றும் பூங்கா பராமரிப்புக்கு என ஒதுக்கப்படும் தொகையும், முறையாக செலவிடாமல், பெருமளவு நிதி முறைகேடு நடப்பதால், 68 ஆண்டு பழமையான பூங்கா அலங்கோலமாக மாறியுள்ளது.
அமராவதி சுற்றுலா மையத்திற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன், அரசு மீது அதிருப்தியுடனும் திரும்பிச்செல்லும் அவல நிலை உள்ளது.
நீர் வளத்துறை மட்டுமின்றி, அவ்வப்போது, சுற்றுலா வளர்ச்சித்துறை அதிகாரிகளும் பூங்கா மேம்படுத்தப்படும் என ஆய்வு செய்து, அறிக்கை அளித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த சுற்றுலா பயணியரும் அதிருப்தியடையும் வகையில், அமராவதி அணை சுற்றுலா மையம் மாறியுள்ளது.
எனவே, அமராவதி அணை பூங்காவை முழுமையாக புதுப்பிக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

