/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி துவக்கம் 10 ஆண்டுகள் பிரச்னைக்கு விமோசனம்
/
செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி துவக்கம் 10 ஆண்டுகள் பிரச்னைக்கு விமோசனம்
செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி துவக்கம் 10 ஆண்டுகள் பிரச்னைக்கு விமோசனம்
செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பால பணி துவக்கம் 10 ஆண்டுகள் பிரச்னைக்கு விமோசனம்
ADDED : ஆக 22, 2025 09:53 PM
செவ்வாப்பேட்டை:செவ்வாப்பேட்டையில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பால பணிகள், 8.11 கோடி ரூபாயில் நேற்று துவங்கியது. வரும் 'ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும்' என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், கடவுப்பாதை 15ல் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வரும் இந்த ரயில் நிலைய கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில், 2015-ம் ஆண்டு, 20 கோடி ரூபாய் மதிப்பில், 660 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பால பணிகள் துவங்கியது. 60 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், 10ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 2024ம் ஆண்டு, 37.9 கோடி ரூபாயில், புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.
அரசு உத்தரவுப்படி பணிகள் துவங்க இருந்த நிலையில், சரிவர பணிகள் மேற்கொள்ளாததால் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்ததாரர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிறைவு பெற்றதையடுத்து, திருவூர் பகுதியில் பழைய ஒப்பந்ததாரரே பணிகள் மேற்கொண்டு வருகிறார். மேலும், திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் படி, 8.11 கோடி ரூபாய் மதிப்பில் மற்றொரு புதிய ஒப்பந்ததாரர் மூலம் ஆவடி சாலை பகுதியில் பணிகள் துவங்குவதற்கு, நேற்று துவக்க விழா நடந்தது. இதில், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார்.
இதில், 'ஆவடி சாலை பகுதியில் மூன்று துாண்களுடன் துவங்கப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணிகளை விரைந்து முடித்து, வரும் ஜூன் மாதம் திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு வரும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரி வித்தார்.