/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்வாய் கிராம டாஸ்மாக் கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?
/
தேர்வாய் கிராம டாஸ்மாக் கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?
தேர்வாய் கிராம டாஸ்மாக் கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?
தேர்வாய் கிராம டாஸ்மாக் கடை பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?
ADDED : ஜூலை 13, 2025 10:36 PM
கும்மிடிப்பூண்டி:தேர்வாய் கிராம மக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றும் விவகாரம், ஓராண்டாக தீர்வு காணப்படாமல் இருப்பதால், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ஊருக்குள் இயங்கி வரும் டாஸ்மாக்கால், கிராம மக்கள் பல வகையான இடையூறுகளை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த கடையை ஒதுக்குபுறமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை கிராம மக்கள் மேற்கொண்டனர்.
ஓராண்டுக்கு முன் ஊருக்கு வெளியே டாஸ்மாக் கடையை மாற்றும் வகையில், தனியார் இடத்தில் புதிய கடை ஒன்று அமைக்கப்பட்டது. இக்கடைக்கு செல்லும் வழி, அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது.
அந்த வழியை பயன்படுத்த, வருவாய் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என, மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.
அந்த இடம், தேர்வாய்கண்டிகை சிப்காட் வசம் ஒப்படைக்கப்பட்டதால், தடையில்லா சான்று வழங்க முடியாது என, வருவாய் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நீடிக்கும் சிக்கலுக்கு தீர்வு ஏற்படாததால், டாஸ்மாக் கடையை இடம் மாற்ற முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே, இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் அல்லது தேர்வாய் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

