/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விதிமீறல் கட்டுமான பணிக்கு தண்ணீர் திருட்டு 'ஜோர்': சென்றம்பாக்கம் ஏரி நீர் வீணாகும் அவலம்
/
விதிமீறல் கட்டுமான பணிக்கு தண்ணீர் திருட்டு 'ஜோர்': சென்றம்பாக்கம் ஏரி நீர் வீணாகும் அவலம்
விதிமீறல் கட்டுமான பணிக்கு தண்ணீர் திருட்டு 'ஜோர்': சென்றம்பாக்கம் ஏரி நீர் வீணாகும் அவலம்
விதிமீறல் கட்டுமான பணிக்கு தண்ணீர் திருட்டு 'ஜோர்': சென்றம்பாக்கம் ஏரி நீர் வீணாகும் அவலம்
ADDED : மே 27, 2024 06:46 AM

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 35 ஏக்கர் பரப்பளவில் சென்றம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை நம்பி, சுற்றுவட்டாரங்களில் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. சுற்றுவட்டார நிலத்தடி நீராதாரமாக இந்த ஏரி உள்ளது.
தற்போது, ஏரியின் சுற்றுவட்டாரங்களில் கட்டப்படும், 'மெகா' கிடங்கு கட்டடங்களுக்காக, மோட்டார்கள் வாயிலாக ஏரி நீர் திருடப்படுகிறது.
இதனால், வறட்சி கண்டு சேறும் சகதியுமான நீர் தேங்கி, குட்டையாக மாறி விட்டது. இந்த ஏரிக்கு அருகே, 80,000 சதுர அடி பரப்பளவில், புதிதாக கட்டப்படும் இரண்டு கிடங்குகளின் கட்டுமான பணிக்காக, கடந்த சில மாதமாக ஏரி நீர் திருடப்படுகிறது.
மேற்கண்ட பிரச்னை குறித்து, புழல் ஊராட்சி ஒன்றிய, 2வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரான், கடந்தாண்டு டிசம்பரில், திருவள்ளூர் கலெக்டர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
அனுமதி உள்ளதா?
ஆனால், அனுமதியின்றி கட்டப்படும் கட்டடம் குறித்து, அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம், மேற்கண்ட கட்டட உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டது.
அதில், 'சி.எம்.டி.ஏ., அனுமதிக்காக விண்ணப்பித்து, உரிய அனுமதி பெற்ற ஆவணத்தை, அலுவலக பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களுக்கான நிலத்தடி நீர் ஆதாரம், கால்நடைகளின் தேவை மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட, சென்றம்பாக்கம் ஏரி நீர் வளம், அனுமதி பெறாத கட்டடத்திற்காக, நீர்மூழ்கி மோட்டார் குழாய் வாயிலாக திருடப்பட்டுள்ளது என, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, புழல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மீரான் கூறியதாவது:
என் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், சி.எம்.டி.ஏ., அனுமதி பெறாத முறைகேடான கட்டடங்களில், பல்வேறு தொழிற்சாலை மற்றும் கிடங்குகள் உள்ளன. அவற்றுக்கான, உரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு வசதியும் இல்லை. இந்த நிலையில், புதிய கட்டுமான பணிகளுக்காக, கூடுதலாக ஏரி நீர் திருட்டு நடக்கிறது.
இந்த நிலை நீடித்தால், நாளடைவில், அங்கு உருவாகும் புதிய கட்டுமானங்களுக்காக, ஏரியில் இருந்து மண், மணல், மரங்கள் உள்ளிட்ட, இயற்கை கனிம வளங்கள் திருடப்பட்டு, ஏரி காணாமல் போகும் அபாயம் உள்ளது.
அதன் பின், பருவ மழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தால், நீர்வழித்தடங்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரங்கள் வெள்ளத்தில் மூழ்கி, மக்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.
இப்படி, மக்களின் நலன் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும், நீதிமன்ற உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட பிரச்னைகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், நேரடி ஆய்வு செய்து, மக்களுக்கு எதிரான பாதிப்புகளை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்பு
புழல் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்றுவதற்கு செங்குன்றத்தில், இரண்டு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஷட்டரின் ஒரு பகுதியில் இருந்து கண்காணிப்பு அறை மற்றும் நீரளவை தளத்திற்கு செல்வதற்கு மூன்று கி.மீ.,க்கு கரையின் மேல் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
கரையின் கீழ்ப்பகுதியில், நீர்வளத்துறைக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இதை ஆக்கிரமிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் தடுக்கப்பட்டது. ஏரி நிலத்தை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சுவர் மற்றும் முள்வேலி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, வெளி மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாடோடிகள், புழல் ஏரிக்கரையை ஒட்டி சென்னை - கோல்கட்டா சர்வீஸ் சாலையில் முகாமிட்டனர்.
இரவு நேரங்களில் பெய்யும் மழையில் இருந்து தப்புவதற்கு, புழல் ஏரிக்கரையில் இருந்த மரங்களுக்கு மேல் கூடாரங்களை அமைத்து, அவர்கள் தங்கி வருகின்றனர். புழல் ஏரிக்கரை சாலையை, கழிப்பறையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏரிக்கரையில் சமூகவிரோத செயல்கள் நடப்பதாக கூறி, நடைப்பயிற்சி செல்வதற்கு தடை செய்துள்ள நீர்வளத்துறையினர், இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இதுமட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செங்குன்றத்திற்கு வாகனங்கள் திரும்பும் இடத்தில், கூடாரம் மட்டுமின்றி வாகனங்களை நிறுத்தி, பழ வியாபாரம் நடத்தப்படுகிறது. இதற்காக, ஏரிக்கரையின் முள்வேலி அகற்றப்பட்டு உள்ளது. இதனால், அங்கு விபத்து அபாயம் உருவாகியுள்ளது.
நீர்வளத்துறை பொறியாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கவனிப்பு நடப்பதால், அவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். புழல் ஏரிக்கரையில் நடந்து வரும் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு, நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

