/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்...நியமனம்!:நேரடி கண்காணிப்பு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
/
பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்...நியமனம்!:நேரடி கண்காணிப்பு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்...நியமனம்!:நேரடி கண்காணிப்பு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
பதற்றமான ஓட்டுச் சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்...நியமனம்!:நேரடி கண்காணிப்பு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஏப் 17, 2024 12:17 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் உள்ள 70 பதற்றமான ஓட்டுச்சாவடிகளுக்கு, தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுப்பதிவு தினத்தன்று, அவற்றை நேரடியாக கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய ஆறு சட்டபை தொகுதிகள் உள்ளன. இங்கு, காங்., - தே.மு.தி.க., - பா.ஜ., - நாம் தமிழர் உள்ளிட்ட, 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், 2,256 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இவற்றில், 70 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, திருவள்ளூர் தொகுதிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர், செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பதற்றமான ஓட்டுச் சாவடிகளை கண்காணிக்க, 70 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி கூட்டம், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அபு இம்ரான், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
திருவள்ளூர் தொகுதியில் உள்ள பதற்றமான 70 ஓட்டுச்சாவடிகளில் நடைபெறும் ஓட்டுப்பதிவை கண்காணிக்க, தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும், பொதுப்பார்வையாளரின் நேரடி பார்வையில் செயல்படுவர்.
நுண் பார்வையாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில், ஓட்டுப்பதிவு நடைபெறும், 19ம் தேதி பார்வையாளர்களாக செயல்படுவர். இந்த மையங்களை நுண் பார்வையாளர்கள் நேடியாக கண்காணித்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தில் குறிக்க வேண்டும். பின், பூர்த்தி செய்த அறிக்கையை தேர்தல் பொது பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், பயிற்சி கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வதஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - தேர்தல் - சத்ய பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பதிவாகும் ஓட்டுகள் எண்ணும் பணி, பெருமாள்பட்டு ஸ்ரீராம் பள்ளியில் நடைபெற உள்ளது. ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், இங்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
இதையடுத்து, ஓட்டு எண்ணும் மையத்தில், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை, ஓட்டு எண்ணிக்கை அறை, தபால் ஓட்டு வைப்பு அறை ஆகியவற்றை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து மின்னணு இயந்திரம் கொண்டு செல்லப்படும் வழி, அரசியல் கட்சி முகவர்கள் செல்லும் வழி, மையத்தில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் தினத்தன்று தேவையான உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என, தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் உள்ளிட்டோர் இருந்தனர்.

