/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் விவசாய நிலத்தை மூழ்கடித்த ஏரி நீர்
/
பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் விவசாய நிலத்தை மூழ்கடித்த ஏரி நீர்
பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் விவசாய நிலத்தை மூழ்கடித்த ஏரி நீர்
பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் விவசாய நிலத்தை மூழ்கடித்த ஏரி நீர்
ADDED : அக் 27, 2025 01:28 AM

திருவாலங்காடு: திருவாலங்காடில், கூடல்வாடி பட்டரை ஏரி நீர், விளை நிலம் வழியாக செல்வதால், பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவாலங்காடில் கூடல்வாடி பட்டரை ஏரி அமைந்துள்ளது. 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரி மூலம், 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஏரியை துார்வாரி 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மேலும், மதகுகள், நீர்வரத்து கால்வாய், கடைமடை மதகு கால்வாய் உள்ளிட்டவை பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளன. இதனால், சாதாரண மழை பெய்தாலே ஏரி நிரம்பி விடுகிறது.
மேலும், நிரம்பிய நீர் கடைமடை கால்வாய் வழியாக, அருகே உள்ள விவசாய நிலங்களை மூழ்கடிக்கிறது. தற்போது, ஏரி கரையின் அருகே உள்ள 100 ஏக்கர் நிலங்கள் மூழ்கியுள்ளன.
இதுகுறித்து திருவாலங்காடு நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புலம்புகின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், 3 - 4 அடி வரை ஏரி நீர் தேங்குகிறது. மழை ஓய்ந்தாலும் தண்ணீரை வெளியேற்ற முடிவதில்லை. கால்வாய் மற்றும் ஏரியை துார்வாரி சீரமைத்தால் மட்டுமே, விவசாய நிலங்கள் தப்பிக்கும்.
இல்லையென்றால், 120 ஏக்கரில் பயிரிடும் 50க்கும் மேற்பட்டோர், விவசாய தொழிலில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏரி நீர், விவசாய நிலங்களை மூழ்கடிப்பதால், நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
எனவே, கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, கால்வாய் மற்றும் ஏரியை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

