/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டில் சோலார் மின் இணைப்பை செயல்படுத்த ஆர்வம்; திருவள்ளூரில் 1,857 பேர் விண்ணப்பித்து காத்திருப்பு
/
வீட்டில் சோலார் மின் இணைப்பை செயல்படுத்த ஆர்வம்; திருவள்ளூரில் 1,857 பேர் விண்ணப்பித்து காத்திருப்பு
வீட்டில் சோலார் மின் இணைப்பை செயல்படுத்த ஆர்வம்; திருவள்ளூரில் 1,857 பேர் விண்ணப்பித்து காத்திருப்பு
வீட்டில் சோலார் மின் இணைப்பை செயல்படுத்த ஆர்வம்; திருவள்ளூரில் 1,857 பேர் விண்ணப்பித்து காத்திருப்பு
UPDATED : டிச 16, 2025 11:55 AM
ADDED : டிச 16, 2025 06:12 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 7,118 வீடுகளில் 'சோலார்' மின் இணைப்பு அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 1,556 வீடுகளில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 1,857 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களின் மனுக்களை மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
இந்தியா முழுதும், ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் 'சோலார்' மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு 2024ம் ஆண்டில் துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், தங்களது வீடுகளின் கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைத்து, ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெறலாம். இதற்காக, மத்திய அரசு 75,021 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
மானியம்
திருவள்ளூர் மாவட்டத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி மற்றும் திருமழிசை ஆகிய மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களை உள்ளடக்கி, திருவள்ளூர் மின்கோட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கோட்டத்தில், 3,54,436 வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. அவற்றில், 55,120 வீடுகளில் 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம் குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், சோலார் மின் தகடு அமைப்போருக்கு 30,000 - 78,000 ரூபாய் வரை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த கலெக்டர் தலைமையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மின்வாரியம், வேளாண்மை, பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்டம் முழுதும் 13 முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழுவினர், திருவள்ளூர் மாவட்டத்தில், 7,118 வீடுகளில் சோலார் மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து, திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
வங்கி கடன் வசதி
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த அக்., வரை, மூன்று கோட்டங்களிலும், 1,556 வீடுகளில் சோலார் மின் தகடு கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய துறையினரும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து, திருவள்ளூர் கோட்ட மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது: வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்க, 2 கி.வாட் வரை 30,000 ரூபாய், அதற்கு மேல் அமைத்தால், 78,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 1 கி.வாட்டிற்கு, தினமும் 5 யூனிட் மின்சாரம் சேமிக்கலாம்.
மாதந்தோறும், 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதன் வாயிலாக, வழக்கமாக செலுத்தும் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். பசுமை மின்சாரம், சோலார் கூரை அமைக்க வங்கி கடன் வசதியும் கிடைக்கும். திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்தில், திருவள்ளூர் - 2,491, திருத்தணி - 1,068, திருமழிசை - 3,559 என, மொத்தம் 7,118 வீடுகளில் சோலார் மின் தகடு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1,556 வீடுகளில் சோலார் மின் தகடு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, 10 கோடி ரூபாய் மானியம், அவர்களது வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டு உள்ளது.
1,857 பேர் விண்ணப்பம்
இத்திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலெக்டர் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதன் பயனாக, கடந்த நவ., 30 வரை, 1,857 பேர் சோலார் மின் தகடு அமைக்க விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பத்தை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம்.

விண்ணப்பதாரர்களின் வீடுகளில், சோலார் மின் தகடு அமைக்க இடவசதி இருக்கும் பட்சத்தில், உடனடியாக அவர்களுக்கு இத்திட்டத்தை செயல் படுத்த அனுமதி வழங்க உள்ளோம். மார்ச் 31ம் தேதிக்குள், மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை நிறைவேற்றும் வகையில், பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

