/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூதுாரில் மாயமான 7 நீர்நிலைகளை மீட்பதில்...அலட்சியம்!:மழைநீரை சேமிக்க முடியாமல் திணறல்
/
பூதுாரில் மாயமான 7 நீர்நிலைகளை மீட்பதில்...அலட்சியம்!:மழைநீரை சேமிக்க முடியாமல் திணறல்
பூதுாரில் மாயமான 7 நீர்நிலைகளை மீட்பதில்...அலட்சியம்!:மழைநீரை சேமிக்க முடியாமல் திணறல்
பூதுாரில் மாயமான 7 நீர்நிலைகளை மீட்பதில்...அலட்சியம்!:மழைநீரை சேமிக்க முடியாமல் திணறல்
ADDED : ஏப் 12, 2024 09:45 PM
சோழவரம்:ஆக்கிரமிப்புகளால் மாயமான ஏழு நீர்நிலைகளை மீட்பதில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், மழைநீரை சேமிக்க முடியாத சூழல் நிலை புதுாரில் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பூதுார் கிராமத்தில் விவசாய நிலங்களை ஒட்டி, 8.21 ஏக்கர் பரப்பில், ஏரி மற்றும் குளங்கள் என மொத்தம் ஏழு நீர்நிலைகள் இருந்தன.
இவை விவசாய நிலங்களின் அருகில் இருந்ததால், தனிநபர்கள் சிலர் நீர்நிலைகளை ஆக்கிரமித்து, அவற்றில் நெல், வாழை உள்ளிட்டவைகளை பயிரிடுகின்றனர்.
மழைக்காலங்களில் நீர்நிலைகளில் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக ஏரி உள்வாய் பகுதியும் ஆக்கிரமிப்பில் உள்ளதால், பூதுார் ஏரிக்கு நீர்வரத்து இன்றி கிடக்கிறது.
மேற்கண்ட கிராமத்தில், மாயமான நீர்நிலைகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2018 ல் இருந்து, கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர், சப் - க ஒலெக்டர், சோழவரம் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர்.
தொடர் கோரிக்கையால், 2021ல், வருவாய்த் துறையினர், 'அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை ஆக்கிரமித்து, பொதுமக்கள் அத்துமீறி விவசாயம் மற்றும் கட்டுமானங்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை செய்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
அடுத்த வந்த நாட்களில் வருவாய்த் துறை வைத்த எச்சரிக்கை பலகைகளை ஆக்கிரமிப்பாளர்கள் துாக்கி எறிந்தனர்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்வதுடன், அவர்கள் பிடியிலேயே அவை உள்ளன. தற்போது ஒரு சில இடங்களில், தனிநபர் வசதிக்காக நீர்நிலையை மூடி பாதை அமைக்கவும் திட்டமிடப்படுகிறது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுவதால், தமிழக அரசின் மீது கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தற்போது அதிகாரிகளை தொடர்பு கொண்டால், தேர்தல் பணிகளில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும்,தேர்தலுக்குப் பின், அரசு அதிகாரிகள் இதில் முழுகவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பூதுார் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆ. சிவகுமார் கூறியதாவது:
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் சோழவரம் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வருவாய்த் துறையினருடன் இணைந்து அவற்றை அகற்றுவதில் அலட்சியமாக இருக்கின்றனர்.
கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தபோது, ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கொடுக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் பதில் மட்டும் வருகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
எச்சரிக்கை பலகைகள் வைப்பதால் பலனில்லை. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீர்நிலைகளை மீட்டு, அவற்றை முழுமையாக துார்வாரி மழைநீரை சேமிக்க நடடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

