/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் புஷ்பாஞ்சலி விமரிசை மழையிலும் திரண்ட பக்தர்கள்
/
திருத்தணி கோவிலில் புஷ்பாஞ்சலி விமரிசை மழையிலும் திரண்ட பக்தர்கள்
திருத்தணி கோவிலில் புஷ்பாஞ்சலி விமரிசை மழையிலும் திரண்ட பக்தர்கள்
திருத்தணி கோவிலில் புஷ்பாஞ்சலி விமரிசை மழையிலும் திரண்ட பக்தர்கள்
ADDED : அக் 27, 2025 11:23 PM

திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு பெற்றது. இன்று காலை உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர் மழையிலும் புஷ்பாஞ்சலி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த 22ம் தேதி துவங்கியது. தினமும் மூலவருக்கு ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மேலும், காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, காலை 8:00 - இரவு 8:00 மணி வரை தினமும் லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று சஷ்டியின் நிறைவு நாளில், அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தங்க கவசம், தங்கவேல் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு வழக்கம் போல் லட்சார்ச்சனை விழா நடந்தது.
மாலை 4:30 மணிக்கு, திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அங்கிருந்து, மலர் கூடைகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை- ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமந்தபடி, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.
மாலை 5:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, 2,500 கிலோ மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நேற்று காலை முதல், 'மோந்தா' புயலால் தொடர்ந்து துாறல் மழையும், அவ்வப்போது பலத்த மழை பெய்த போதிலும், திரளான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர்.

