/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழிக்குப்பழி, கோஷ்டி மோதலால் சென்னையில் பீதி போதையில் இளம் ரவுடி கும்பல்கள் அட்டகாசம்
/
பழிக்குப்பழி, கோஷ்டி மோதலால் சென்னையில் பீதி போதையில் இளம் ரவுடி கும்பல்கள் அட்டகாசம்
பழிக்குப்பழி, கோஷ்டி மோதலால் சென்னையில் பீதி போதையில் இளம் ரவுடி கும்பல்கள் அட்டகாசம்
பழிக்குப்பழி, கோஷ்டி மோதலால் சென்னையில் பீதி போதையில் இளம் ரவுடி கும்பல்கள் அட்டகாசம்
ADDED : ஏப் 29, 2024 11:37 PM

'பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை, வாலிபர் தலை துண்டிப்பு, தம்பதி கழுத்தறுத்து கொலை' என, தினமும் நெஞ்சை உறையவைக்கும் சம்பவங்கள் நடப்பதால், தலை நகரம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது.
ரவுடி கோஷ்டிகளின் மோதல், போதையில் ரவுடிகள் செய்யும் அட்டகாசங்களால் சென்னை மக்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. அத்துடன், சிறுவர்கள் கூட போதை பொருட்களுக்கு அடிமையாகி, வன்முறைகளில் ஈடுபடுவதும், சாலைகளில் அலங்கோலமாக கிடப்பதும், பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், சென்னை கே.கே.நகரில், ரவுடி ரமேஷ், 40, என்பவர், எதிர் கோஷ்டி ரவுடிகளால் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்டார். அதேபோல், தண்டையார்பேட்டை நேரு நகரில், ரவுடி 'லொட்டை' என்ற ஆனந்த் என்பவரை, வீடு புகுந்து ரவுடிகள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். உயிரிழந்த ரவுடி ஆனந்த் மீது, இரண்டு கொலை உட்பட 14 வழக்குகள் உள்ளன.
ரவுடி விரட்டி கொலை
இப்படி தலைநகரில், பழிக்கு பழியாக ரவுடிகள் தீர்த்துக் கொள்ளப்படுவதும், எதிரிகளின் கதைகளை முடிப்பதுமாக, கொலை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் கொலைகள் நடப்பதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சென்னை, வில்லிவாக்கம், ராஜா தெருவைச் சேர்ந்த சரத்குமார், 30, என்ற ரவுடி, நேற்று மதியம் 1:00 மணியளவில், செங்குன்றம் - வில்லிவாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை, இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த ஏழு பேர் உடைய கும்பல் வழிமறித்தது.
அதிர்ச்சி அடைந்த சரத்குமார், அவர்களிடம் இருந்து தப்பிக்க, ஓட்டம் பிடித்தார். விரட்டிச் சென்ற எதிர் கோஷ்டி ரவுடி கும்பல், சரத்குமாரை சுற்றி வளைத்து, பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். இதனால், முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சரத்குமார் உடலை மீட்டு, ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பெரவள்ளூரில், 2019ல் ஜானகிராமன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் ரவுடி சரத்குமார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இரட்டை கொலை
சென்னை, ஆவடி அடுத்த மிட்னமல்லி, காந்தி பிரதான சாலை, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சிவன் நாயர், 60; ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி பிரசன்ன குமாரி, 55; மத்திய அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஓய்வுக்கு பின், சிவன் நாயர், வீட்டிலேயே கிளினிக் துவங்கி, சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்தார்.
அவரது மகனும் அதே பகுதியில் சித்த மருத்துவராக உள்ளார். மகள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, சிவன் நாயர் நாயரும், பிரசன்னா குமாரியும், மர்மமான முறையில், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆவடி துணை கமிஷனர் அய்மான் ஜமால் தலைமையில், ஐந்து தனிப்படைகள் அமைத்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொலை நடந்த தெருவில் உள்ள வீடுகளில், 'சிசிடிவி' காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், துப்பு எதுவும் கிடைக்காததால், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. மோப்ப நாய் 'டாகி' வரவழைக்கப்பட்டது.
அந்த நாய், காந்தி பிரதான சாலை வழியாக, பாலவேடு பிரதான சாலையில், 1 கி.மீ., துாரம் சென்றது. வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தீபாஞ்சி அம்மன் கோவில் அருகே சுற்றிவந்து, மீண்டும், வந்த வழியாக திரும்பியது.
மொபைல் போன் சிக்கியது
இரட்டை கொலை நடந்த வீட்டில், மர்ம நபர்களின் மொபைல் போன் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதை அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன் ஆய்வு செய்தனர். அந்த மொபைல் போன், நீண்ட நாட்களாக சென்னை வளசரவாக்கம் பகுதியில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள, ஹார்டுவேர் கடையில் பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ், 20, என்பவரை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலை துண்டிப்பு
பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின்குமார், 26 , என்ற இளைஞர், மீஞ்சூர் பஜார் பகுதியில் கைகள் வெட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். துணியில் அவரை சுருட்டி, சாலையோரம் வீசப்பட்டு கிடந்தார்.
அவரது தலை, சுடுகாட்டில் கிடந்தது. ரத்த காயங்களுடன் அவரது உடல், மீஞ்சூர் பஜார் பகுதியில், படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டு கிடந்தது.
சோழவரம் அடுத்த பெருங்காவூர் சுடுகாட்டில், ரவுடி அஜய்குமார் என்பவரின் சமாதியில், அஸ்வின்குமாரின் தலை வைக்கப்பட்டிருந்தது.
இதனால், ரவுடி அஜய்குமாரின் கோஷ்டியினர் பழி தீர்ப்பதற்காக இந்த கொலையை செய்துள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.
இவ்வழக்கில், மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்கிற அவ்ஜா, 21, என்ற ரவுடி, நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
அஸ்வின் குமார், வழுதிகைமேடைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதால், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக, அஜித் வாக்குமூலம் அளித்துள்ளார். வழக்கு விசாரணையை திசை திருப்புவதற்காக, அஸ்வின் தலையை பெருங்காவூர் சுடுகாட்டில் வைத்தாகவும் அஜித் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் கொலை வழக்கில் தொடர்புடைய, சென்னை அயனம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், 22, பெருங்காவூரைச் சேர்ந்த கார்த்தி, 27, மீஞ்சூர் அடுத்த தத்தமஞ்சியைச் சேர்ந்த மனோ, 27, அயபாக்கத்தைச் சேர்ந்த தேவராஜ், 29, மீஞ்சூர் சூர்யா நகரைச் சேர்ந்த மோகன், 24, ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தினமும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால், தலைநகரம் கொலை நகரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களும்வெளியே செல்ல முடியாமல் பீதியில் உறைந்து உள்ளனர்.
- நமது நிருபர் குழு -

