/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்தல் விதிமுறை தெரியாமல் 5 பேருடன் வந்த காங்., வேட்பாளர்
/
தேர்தல் விதிமுறை தெரியாமல் 5 பேருடன் வந்த காங்., வேட்பாளர்
தேர்தல் விதிமுறை தெரியாமல் 5 பேருடன் வந்த காங்., வேட்பாளர்
தேர்தல் விதிமுறை தெரியாமல் 5 பேருடன் வந்த காங்., வேட்பாளர்
ADDED : மார் 28, 2024 12:08 AM

திருவள்ளூர், தேர்தல் விதிமுறையை மீறி, காங்., வேட்பாளர் ஐந்து பேருடன் வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்த வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் சசிகாந்த் போட்டியிடுகிறார். அவர், நேற்று காலை டோல்கேட் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 'இண்டியா' கூட்டணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், அங்கிருந்து ஊர்வலமாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் போலீசார் அவர்களை தடுத்து, வேட்பாளருடன் நான்கு பேர் மட்டும் உள்ளே செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும், கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒருவரை ஒருவர் தள்ளியபடி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்துவதற்குள், 50க்கும் மேற்பட்டோர் சென்று விட்டனர். அதன்பின், நுழைவாயில் கதவை போலீசார் மூடி, மற்ற தொண்டர்கள் யாரும் உள்ளே வரவிடாமல் தடுத்தனர்.
வேட்புமனு தாக்கல் நடைபெறும் கலெக்டர் அறைக்குள் வேட்பாளர் சசிகாந்துடன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான திருவள்ளூர் ராஜேந்திரன், மாதவரம் சுதர்சனம், கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், ஆவடி நாசர், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் ஆகியோர் வந்தனர்.
கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் பிரபுசங்கரிடம், ஆறு பேர் சேர்ந்து மனு தாக்கல் செய்தனர். இதைப் பார்த்த கலெக்டர், 'தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே இருக்க வேண்டும். யாராவது ஒருவர் வெளியில் செல்லுங்கள்' என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் வெளியில் சென்றார். பின், வேட்பாளர் உறுதிமொழி வாசித்து விட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், 'என் பூர்வீக வீடு வேப்பம்பட்டில் தான் உள்ளது. நான் வெளியூர்க்காரன் அல்ல. மக்கள் கோரிக்கையை அறிந்து, தொகுதியை மேம்படுத்துவேன்' என்றார்.
காங்., வேட்பாளருக்கு ஆதரவாக, தி.மு.க., உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கூடி, ஊர்வலமாக வந்ததால், டோல்கேட் முதல் காமராஜர் சிலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

