/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலையில் சத்தமில்லாமல் திறக்கப்பட்ட டாஸ்மாக்; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என வனத்துறைக்கு கடிதம்
/
மேகமலையில் சத்தமில்லாமல் திறக்கப்பட்ட டாஸ்மாக்; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என வனத்துறைக்கு கடிதம்
மேகமலையில் சத்தமில்லாமல் திறக்கப்பட்ட டாஸ்மாக்; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என வனத்துறைக்கு கடிதம்
மேகமலையில் சத்தமில்லாமல் திறக்கப்பட்ட டாஸ்மாக்; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என வனத்துறைக்கு கடிதம்
ADDED : அக் 02, 2024 07:19 AM
கம்பம் : மேகமலை பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை சத்தமில்லாமல் மீண்டும் திறந்ததற்கு பெண் தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனத்துறை சார்பிலும் அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னமனூரிலிருந்து 46 கி.மீ. தொலைவில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு வெண்ணி யாரு , இரவங்கலாறு , மகாராசா மெட்டு உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளது . ஆயிரக்கணக்கான ஏக்கர் தேயிலை தோட்டங்கள் உள்ளது. இவற்றில் நூற்றுக்கணக்கில் தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் வேலை செய்கின்றனர்.
ஏழு எஸ்டேட்டுகளுக்கும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் செயல்பட்டு வந்தது. இங்கு சுற்றுலா வந்து தங்கியிருந்த உயர் நீதித்துறை அதிகாரி ஒருவர் மதுக்கடையை அகற்ற உத்தரவிட்டார். உடனடியாக கடை அகற்றப்பட்டது. அதன் பின் டாஸ்மாக் இங்கு இல்லை. தற்போது மீண்டும் டாஸ்மாக் திறக்க நிர்வாகம் முடிவு செய்து சில நாட்களுக்கு முன் சத்தமில்லாமல் கடையை திறந்து விற்பனையை ஜோராக நடத்தி வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு இங்குள்ள தோட்ட பெண் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பெண்கள் கூறுகையில், மதுக்கடை இல்லாததால் 5 ஆண்டுகளாக நிம்மதியாக இருந்தோம். தற்போது மீண்டும் கடை திறந்ததால் வாங்கும் கூலியை குடித்து விட்டு வெறும் கையுடன் ஆண்கள் வீடு திரும்புகின்றனர். நாங்களும் எங்கள் குழந்தைகளும் பட்டினியாய் இருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
வனத்துறையும் எதிர்ப்பு: இதற்கிடையே டாஸ்மாக் கடை திறந்ததற்கு புலிகள் காப்பக அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு காரணம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், மது அருந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகமாக புழக்கத்திற்கு வரும். ஏற்கெனவே சோதனை சாவடியில் வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து வரும் நிலையில் டாஸ்மாக் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் , பாலிதீன் பயன்பாடு அதிகமாகும்.
இது சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்தாக முடியும் என்று புலிகள் காப்பக அதிகாரிகள் அரசிற்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

