/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி: பந்த்தால் மூணாறு ஸ்தம்பித்தது இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
/
காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி: பந்த்தால் மூணாறு ஸ்தம்பித்தது இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி: பந்த்தால் மூணாறு ஸ்தம்பித்தது இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி: பந்த்தால் மூணாறு ஸ்தம்பித்தது இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
ADDED : பிப் 28, 2024 04:48 AM

மூணாறு, : மூணாறு அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நடைபெற்ற 'பந்த்' தால் நகர் ஸ்தம்பித்தது.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனைச் சேர்ந்தவர் தொழிலாளி சுரேஷ்குமார் 45. இவர் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் ஆட்டோவை ஓட்டினார். டாப் டிவிஷனில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களை நிர்வாக உத்தரவுபடி தனது ஆட்டோவில் அழைத்து செல்வதுண்டு.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 9:00 பணி முடிந்த ஒடிசாவைச் சேர்ந்த பில்சன்முண்டே 28, ஜார்கண்டைச் சேர்ந்த ஆதித்யா 18, ஆகிய தொழிலாளர்களை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த ஆட்டோவில் டாப் டிவிஷனைச் சேர்ந்த இசக்கி ராஜ் 45, அவரது மனைவி ரெஜினா 38, மகள் குட்டிபிரியா 11, ஆகியோரும் இருந்தனர்.
டாப் டிவிஷனில் உதவி மேலாளர் பங்களா அருகே ஆட்டோ சென்றபோது எதிரே ஆண் காட்டு யானை வந்தது. அந்த யானை எதிர்பாராத வகையில் ஆட்டோவை தந்தங்களால் குத்தி தூக்கி சேதப்படுத்தியது. அதில் ஆட்டோ உருக்குலைந்தது.
வட மாநில தொழிலாளர்கள் உயிர் தப்பிய நிலையில் இசக்கிராஜ் பலத்த காயங்களுடன் ஓடினார். அவரை 200 மீட்டர் தூரம் யானை விரட்டியது. சம்பவ இடத்திற்குச் சென்ற தொழிலாளர்கள் ஆட்டோவினுள் சிக்கி இருந்த ரெஜினா, குட்டிபிரியா மற்றும் இசக்கிராஜ் ஆகியோரை மீட்டு மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த வழியில் ஜீப்பில் வந்தவர்கள் குற்றுயிராக கிடந்த சுரேஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பந்த்
கடந்த ஜனவரியில் காட்டுயானை தாக்கி பால்ராஜ் 79, இறந்தார். ஒரு மாதம் இடைவெளியில் மீண்டும் உயிர் பலி ஏற்பட்டதால் காட்டு யானைகளை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட சுரேஷ் குமார் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மூணாறு பகுதியில் அனைத்து கட்சியினர் சார்பில் 'பந்த் நடந்தது.மூணாறு அனைத்து ரோடுகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தி வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் நகரம் ஸ்தம்பித்தது.
பேச்சுவார்த்தை: வயநாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி பலியானவருக்கு உடனடியாக ரூ. 10 லட்சம் இழப்பீடு தொகை, அரசு வேலை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. அது போன்று சுரேஷ்குமாரின் குடும்பத்தினருக்கும் வழங்க வலியுறுத்தி அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல மறுத்து விட்டனர். தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.
எம்.எல்.ஏ. ராஜா, வனத்துறை அதிகாரி ஜோப் கே. நேரியம்பரம்பில், மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ் பேபி, இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதில் சுரேஷ்குமாரின் குடும்பத்திற்கு உடனே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும், பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்க அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்படது. உயிர் பலி ஏற்படும் வகையில் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
இதன்படி இறந்த சுரேஷ் குமாரின் மனைவி இந்திராவிடம் வனத்துறை ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. பின் சுரேஷ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் வாகனங்கள் ஓட துவங்கின.
அடையாளம் தெரிந்தது
சுரேஷ்குமாரை கொன்ற யானை கடந்த மாதம் தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் கோவையைச் சேர்ந்த பால்ராஜை பலி வாங்கியது என வனத்துறையினர் அடையாளம் கண்டனர். அந்த யானை நேற்று பகலில் குண்டுமலை எஸ்டேட் சோத்து பாறை பகுதியில் நடமாடியது.

