/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெடி பொருட்கள் பதுக்கிய கூலித்தொழிலாளி கைது
/
வெடி பொருட்கள் பதுக்கிய கூலித்தொழிலாளி கைது
ADDED : நவ 27, 2025 01:53 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பையில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக டெட்டனேட்டர்கள், வெடி பொருட்களை பதுக்கி வைத்த கூலித்தொழிலாளி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
மணிகண்டன் 40, வீட்டில் வெடிப் பொருட்கள் வைத்துள்ளதாக வி.ஏ.ஓ., சியாம் சுந்தருக்கு தகவல் கிடைத்தது. ஆண்டிபட்டி போலீசார் வி.ஏ.ஓ., ஆகியோர் மணிகண்டன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 5 டெட்டனேட்டர்கள், களி மருந்து 19 பாக்கெட்டுகள், முக்கோண வடிவ சிறிய அளவிலான வெடி மருந்து நிரப்பப்பட்ட 8 பூந்தொட்டிகள், சணல் கயிறு 2 ரோல் உள்ளிட்டவை இருந்தன.
விசாரணையில் இவுற்றை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வீரக்கல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், முத்துராஜ், காமாட்சிபுரம் குன்னத்துப்பட்டியை சேர்ந்த பிரமன் ஆகியோரிடம் வாங்கியதாக மணிகண்டன் தெரிவித்தார். மணிகண்டனை கைது செய்த போலீசார், டெட்டனேட்டர் உட்பட வெடிப் பொருட்களை பறிமுதல் செய்து இவற்றை விற்பனை செய்த மூவரை தேடி வருகின்றனர்.
ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் கூறுகையில், ''கல்குவாரிகளில் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தவும், களி மருந்து பயன்படுத்தவும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் அனுமதி உண்டு. இதில் முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கவும், டி.எஸ்.பி.,க்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர் நடவடிக்கையாக மணிகண்டன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சப்ளை செய்தவர்களை தேடி வருகிறோம், என்றார்.

