ADDED : ஆக 13, 2024 12:34 AM
பெரியகுளம் : சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யும் குடிநீர் செல்லும் குழாய் வடுகபட்டி மேம்பாலம் அருகே உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து வடுகபட்டி பேரூராட்சி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி என ஆறு ஊராட்சிகளுக்கு உட்பட்ட 40 உட்கடை கிராமங்களுக்கு தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.
சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் 11 கி.மீ., தூரம் குழாய் மூலம் தென்கரை பேரூராட்சி ஜே.ஆர்.ஆர்., நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வந்து பம்பிங் மூலம் ஏற்றி, வடுகபட்டி பேரூராட்சிக்கு வலது புறம் குழாய் வழியாகவும், பிற ஊராட்சிகளுக்கு இடது புறம் குழாய் வழியாக அனுப்பப்படுகிறது.
வடுகபட்டி பைபாஸ் ரோட்டில் இருந்து ஊருக்கு செல்லும் மேம்பால பகுதி உட்பட 3 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
இதனால் ஊராட்சிகளுக்கு செல்லும் தண்ணீர் அளவு குறைகிறது.குடிநீர் வாரியம் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும்.

