/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயனுள்ள நேரத்தில் வராத மும்முனை மின்சாரம்; உச்சிவெயிலில் பாய்ச்சுவதால் வீணாகும் தண்ணீர்
/
பயனுள்ள நேரத்தில் வராத மும்முனை மின்சாரம்; உச்சிவெயிலில் பாய்ச்சுவதால் வீணாகும் தண்ணீர்
பயனுள்ள நேரத்தில் வராத மும்முனை மின்சாரம்; உச்சிவெயிலில் பாய்ச்சுவதால் வீணாகும் தண்ணீர்
பயனுள்ள நேரத்தில் வராத மும்முனை மின்சாரம்; உச்சிவெயிலில் பாய்ச்சுவதால் வீணாகும் தண்ணீர்
ADDED : மார் 15, 2024 11:52 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் விவசாயத்திற்கு பயனுள்ள நேரத்தில் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
சிங்கம்புணரி, எஸ்.புதுார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய தேவைகளுக்காக பகல், இரவு நேரங்களில் மும்முனை மின்சாரம் குறிப்பிட்ட சில மணி நேர இடைவெளியில் விநியோகிக்கப்படுகிறது. பகலில் விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் இல்லாமல் உச்சி வெயில் நேரத்தில் மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் விவசாய பணிகளை கவனிக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
குறிப்பாக காலை 9:00 மணிக்கு தொடங்கி மதியம் 3:00 மணி வரை மின்சாரம் விநியோகிக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது. பிறகு இரவு 10:00 மணிக்கு தொடங்கி காலை 6:00 மணி வரை விடப்படுகிறது. பொதுவாக விவசாயிகள் காலை 6:00 மணியில் இருந்து 9:00 மணி வரையிலும் மதியம் 3:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரையிலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சும் போது தான் தண்ணீர் வெயிலில் ஆவி ஆகி வீணாகாமல் முழுவதும் மண்ணுக்கும் பயிருக்கும் சேரும். பகலில் உச்சி வெயில் நேரத்தில் மின்சாரம் விநியோகிக்கப்படும்போது மண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே அவை ஆவி ஆகி விடுகிறது. இது பயிர்களுக்கும் பயனில்லாமல் போகிறது.
உ.சிவராமன், உலகம்பட்டி: விவசாயிகள் பெரும்பாலும் காலை 6:00 மணியில் இருந்து 9:00 மணி வரையிலும் மதியம் 3:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரையிலும் தான் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரங்களில் தண்ணீர் பாய்ச்சினால் தான் அது முழுவதும் மண்ணுக்கும் பயிருக்கும் பயன் தரும். தண்ணீர் ஆவியாகி வீணாவதும் குறையும். ஆனால் அந்த நேரங்களில் மும்முறை மின்சாரம் வழங்கப்படாததால் எஸ்.புதுார் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். எனவே காலை மாலை நேரங்களில் கூடுதலாக விவசாயத்துக்கு உதவும் வகையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

