விஸ்வரூபம் எடுக்கும் குப்பை கிடங்கு பிரச்னை: தொடர் போராட்டங்களால் விடிவு இல்லை
விஸ்வரூபம் எடுக்கும் குப்பை கிடங்கு பிரச்னை: தொடர் போராட்டங்களால் விடிவு இல்லை
ADDED : ஏப் 12, 2026 05:08 PM

இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சி குப்பை கிடங்கால் பொது மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் தினந்தோறும் சேகரமாகும் குப்பை மற்றும் இறைச்சி கழிவு தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குப்பை கிடங்கு மற்றும் வள மீட்பு பூங்காவில் கொட்டப்பட்டு வருகிறது.
நாலரை ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இங்கு 2 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதால் மீதமுள்ள இடத்தில் குப்பையை கொட்டுவதற்கு இடமில்லாமல் குப்பை கிடங்கிற்கு செல்லும் ரோட்டின் ஓரங்களிலும், அதன் அருகில் உள்ள மயானத்திலும், மற்ற தனியார் இடங்களிலும் குப்பையை கொட்டி வருவதால் அப்பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் குப்பையை தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நீண்ட வருடங்களாக நிலவும் இப்பிரச்னையை தீர்க்க வேண்டுமென இளையான்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பகுதியில் குப்பை கிடங்கை மாற்ற வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் அங்கு குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அப்பகுதியில் உள்ள மக்கள் இங்கு குப்பை கிடங்கு வரக்கூடாது என போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியார் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அப்பகுதி மக்களும் இங்கு குப்பை கிடங்கு அமைக்க கூடாது என போராட்டம் நடத்தியதை தொடர்ந்து குப்பை கிடங்கு பிரச்னை பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இளையான்குடி பகுதி மக்கள் குப்பை கிடங்கு பிரச்னையை தீர்ப்பதாக கூறிய ஆளும் தி.மு.க.,வினர் தற்போது தேர்தல் நேரத்தில் கூட இப்பிரச்னையை தீர்க்காமல் உள்ளனர்.
