/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் புறவழிச்சாலையில் தொடர் விபத்துக்கள்: பாலம் அமைக்க கோரிக்கை
/
திருப்புத்துார் புறவழிச்சாலையில் தொடர் விபத்துக்கள்: பாலம் அமைக்க கோரிக்கை
திருப்புத்துார் புறவழிச்சாலையில் தொடர் விபத்துக்கள்: பாலம் அமைக்க கோரிக்கை
திருப்புத்துார் புறவழிச்சாலையில் தொடர் விபத்துக்கள்: பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 24, 2024 05:20 AM

பாலம் அமைக்க கோரிக்கை
திருப்புத்துார்: திருப்புத்துார் வழியாக செல்லும் மேலுார் -காரைக்குடி தொழில் வட இருவழிச்சாலையின் புறவழிச்சாலை - தேவரம்பூர் ரோடு சந்திப்பில் நிகழும் தொடர் விபத்துக்களை தவிர்க்க கிராமத்தினர் பாலம் கட்ட கோரியுள்ளனர்.
சென்னை--கன்னியாகுமரி தொழில் வட சாலையின் ஒரு பகுதியாக மேலுார் - திருப்புத்துார் சாலை நெடுஞ்சாலைத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது. அதில் திருப்புத்துாருக்கு வெளியே கோட்டையிருப்பிலிருந்து 2.6 கி.மீ. புறவழிச்சாலை போடப்பட்டுள்ளது. அதில் தேவரம்பூருக்கும், திருப்புத்துார் குறிஞ்சி நகருக்கும் விலக்கு ரோடு செல்கிறது.
இந்த சந்திப்பில் நேருக்கு நேர் சந்திக்கும் இரு விலக்கு ரோடுகளும் தாழ்வாக உள்ளன. இதனால் புறவழிச்சாலையில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு விலக்கு ரோடுகளில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து நடைபெறுவது தொடர்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் வாகனங்கள் மோதியதில் 3 பேர் இறந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தேவரம்பூர் செல்ல ரோட்டை கடக்க முயன்ற ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.குறிப்பாக இரவுநேரங்களில் விபத்து அதிகமாக நடக்கின்றன.
இந்த சந்திப்பில் இருவழிச்சாலையில் அமைக்கப்பட்ட இரு தெருவிளக்குகளும் எரிவதில்லை. மேலும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சிவப்பு ரிப்ளக்டர் வேலை செய்வதில்லை. இதனாலும் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
தேவரம்பூர் வெங்கடேஷ் கூறுகையில், 'நெடுஞ்சாலையில் பாலம் அமைத்து கிராமச்சாலை பாலத்தின் கீழ் செல்லுமாறு அமைக்க கோரியிருந்தோம். நெடுஞ்சாலை அதிகாரிகள் அதை புறக்கணித்ததால் இப்போது விபத்துக்கள் தொடர்கின்றன. வருங்காலங்களில் இந்த ரோட்டில் மேலும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எனவே இனியாவது இதற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றார்.
தேவரம்பூர் கார்த்திகேயன் கூறுகையில், 'இந்த சந்திப்பில் ரோட்டோரம் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும். மேலும் ரோட்டிலுள்ள மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாக விலக்கு ரோடு அருகில் வாகனங்கள் நின்று செல்லுமாறு பாதுகாப்பு தடுப்பு நிறுவலாம். இருபுறமும் சிக்னல் செயல்படச் செய்ய வேண்டும்' என்றார்.
நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வாக பாலம் அமைத்து கிராமச்சாலை கீழாக செல்ல நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

