/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோழி இனப்பெருக்க பண்ணை தீவன ஆலை பணி தாமதம்
/
கோழி இனப்பெருக்க பண்ணை தீவன ஆலை பணி தாமதம்
ADDED : நவ 13, 2024 09:28 PM
காரைக்குடி; செட்டிநாடு கால்நடை பண்ணையில் நடந்து வரும் நாட்டு கோழி இனப்பெருக்க பண்ணை, தீவன ஆலை மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு கால் நடைப் பண்ணையில் 300 ஏக்கரில் மானாவாரி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கால்நடை பண்ணையில், உம்பளாச்சேரி, ஆலம்பாடி பர்கூர், காங்கேயம், புலிக்குளம் மற்றும் முர்ரா எருமை வகை என நாட்டின மாடுகள் இருந்தன.
ராமநாதபுரம் வெள்ளை ஆடுகள் ஜமுனாபாரி வெள்ளாடுகள் லார்ஜ் ஒயிட் ஆடு வகைகள் இருந்தன. பன்றிகளில் யார்க்சயர் எனும் பன்றி இனம் இருந்தது. கோழிகளில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டன.
கால்நடைகளை பராமரிக்க, கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், மேஸ்திரிகள், மந்தைக்காப்பாளர், தவிர தினக்கூலி வேலையாட்கள் என பலர் வேலை செய்து வருகின்றனர். தற்போது கால்நடைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் கூடுதலாக ஆடுகள் மாடுகள் கோழிகள் வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காரைக்குடி அருகே கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் இயங்கும் செட்டிநாடு கால்நடை பண்ணையில், நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை உருவாக்குதல் தீவன ஆலை அமைத்தல் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.13.81 கோடியில் புதிய கட்டடப் பணி அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரியில் நடந்தது. ஒரு வருடத்தை நெருங்கி உள்ள நிலையில் இதுவரை பணிகள் முடித்து திறப்பு விழா நடைபெறவில்லை. விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்: தற்போது கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. பிற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் முழுமையாக பணி முடிந்து, கோழி இனப்பெருக்க பண்ணை, தீவன ஆலை மற்றும் குஞ்சு பொரிப்பகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.

