/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் தவிப்பு
/
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் தவிப்பு
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் தவிப்பு
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் தவிப்பு
ADDED : மார் 08, 2024 12:53 PM
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி 1947ல் நிறுவப்பட்டது. ஏழை மாணவர்களுக்காக அழகப்ப செட்டியாரால் நிறுவப்பட்ட இக்கல்லுாரி தொடக்கத்தில் காந்தி மாளிகையில் இயங்கியது. 1948ம் ஆண்டு 13.5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கட்டடத்துடன் கல்லுாரி செயல்பட தொடங்கியது. தனியார் கல்லுாரியாக தொடங்கப்பட்டு ஆரம்பத்தில் சென்னை பல்கலை.,யுடன் இணைக்கப்பட்டது.
தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலை., யுடன் இணைக்கப்பட்டது. கடந்த 2003 ம் ஆண்டு காரைக்குடியில் அழகப்பா பல்கலை நிறுவப்பட்டதை தொடர்ந்து அழகப்பா பல்கலையுடன் கல்லுாரி இணைக்கப்பட்டது.
பின்தங்கிய மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இக்கல்லுாரியில் தற்போது 3 ஆயிரத்து 700 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 2500 மாணவிகளும் 1300 மாணவர்களும் உள்ளனர்.
காரைக்குடி மட்டுமின்றி சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை திருப்புத்துார், சிங்கம்புணரி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் இக்கல்லுாரியை நம்பி உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடம் இல்லாததால் இரு ஷிப்ட் முறையில் கல்லுாரி செயல்பட்டு வந்தது. தற்போது ஒரே ஷிப்ட் முறையில் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
போதிய இட வசதியின்றி மாணவர்கள் திணறி வருகின்றனர்.
மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பறை இல்லாததால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். கல்லுாரிக்குச் செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் டவுன் பஸ்களில் மாணவர்கள் படியில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
தவிர காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லுாரி சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பிற கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்களும் அழகப்பா கல்லுாரி வளாகம் மற்றும் மைதானத்திற்கு வந்து செல்வது கூட கண்டுபிடிக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனை தடுக்கும் பொருட்டே இரு ஷிப்ட் முறையில் கல்லுாரி இயங்கி வந்தது. ஆனால் தற்போது ஒரே ஷிப்ட் முறையில் கல்லுாரி இயங்கி வருகிறது.
ஆண்டுதோறும் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை வருகிறது. ஆனால் ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்படுகிறது.
இரு ஷிப்ட் முறையில் கல்லுாரி செயல்பட்டால் இட நெருக்கடி குறைவதோடு 500 மாணவர்களுக்கு கூடுதலாக சீட் கிடைக்கும். சிவகங்கை பரமக்குடி புதுக்கோட்டை உட்பட பல்வேறு அரசு கலைக்கல்லுாரிகள் இரு ஷிப்ட் முறையில் செயல்பட்டு வரும் நிலையில் அழகப்பா அரசு கலைக்கல்லுாரி மட்டும் ஒரே ஷிப்ட் முறையில் செயல்படுவதால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு காரைக்குடி பகுதியில் அரசு மகளிர் கல்லுாரி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அரசு மகளிர் கல்லுாரி தொடங்கப்படும் என தொடர்ந்து தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நிறைவேறவில்லை. புதிதாக கல்லுாரி தொடங்கப்படாவிட்டாலும் இரு ஷிப்ட் முறையில் அழகப்பா அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டால் இட நெருக்கடி குறைவதோடு மாணவர்களுக்கும் கூடுதலாக இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
மாங்குடி எம்.எல்.ஏ., கூறுகையில்: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் வழங்கப்பட்ட 10 கோரிக்கைகளில் 2 கோரிக்கையை நிறைவேற்றி உள்ளனர். மற்ற 8 கோரிக்கையில் மகளிர் கல்லுாரியும் ஒன்று.
மகளிர் கல்லுாரி அறிவிப்பு காலதாமதம் ஏற்படுவதாக கூறி மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
75 ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு பவள விழா கட்டடம் கட்டுவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கூடுதல் வகுப்பறையும் கேட்டுள்ளோம். மேலும் இக்கல்லுாரிக்கு விளையாட்டு மைதானம் இல்லை.
அதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது. புதிய வகுப்பறை கட்டடங்களும் விளையாட்டு மைதானமும் விரைவில் அமைத்து தருவதாக உயர்கல்வி துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

