/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டனுாரில் ஒரே நேரத்தில் சாலைப்பணி போக்குவரத்து நெரிசலால் திணறல்
/
கண்டனுாரில் ஒரே நேரத்தில் சாலைப்பணி போக்குவரத்து நெரிசலால் திணறல்
கண்டனுாரில் ஒரே நேரத்தில் சாலைப்பணி போக்குவரத்து நெரிசலால் திணறல்
கண்டனுாரில் ஒரே நேரத்தில் சாலைப்பணி போக்குவரத்து நெரிசலால் திணறல்
ADDED : மார் 09, 2024 08:36 AM

காரைக்குடி : கண்டனுாரில் ஒரே நேரத்தில் சாலையின் இருபுறங்களிலும் பணி நடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது,
கோட்டையூர் புதுவயல் நெடுஞ்சாலையோரம் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. புதிய சாலைப் பணி நடந்த சில வாரங்களிலேயே குழாய் பதிப்புக்காக சாலை தோண்டப்பட்டது. நெடுஞ்சாலை சீரமைப்பு பணிக்காக குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு நிதி வழங்கப்பட்டது.
இதற்காக தனியாக டெண்டர் விடப்பட்டு தற்போது கண்டனுார் பகுதியில் சாலையின் இருபுறமும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
புதுவயல் அறந்தாங்கி செல்லும் முக்கிய சாலையாக கண்டனுார் சாலை உள்ளது. மேலும் புதுவயல் அரிசி ஆலைகளுக்கும் தினமும் லாரிகள் வந்து செல்கின்றன. இச்சாலையின் இருபுறமும் தோண்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
பா.ஜ., நகர் தலைவர் குமார் கூறுகையில்:
சாலையின் ஒருபுறம் சாலைப்பணியை முடித்து மறுபுறம் சாலை அமைக்கும் பணியை தொடர வேண்டும். ஆனால் ஒரே நேரத்தில் சாலையின் இருபுறமும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும்போது பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர இருபுறமும் எழும் துாசியால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர், இது குறித்து கேட்பதற்கு கூட அதிகாரிகளோ கான்ட்ராக்டர்களோ இல்லை.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது:
சாலையின் இருபுறமும் தோண்டப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். சாலையில் கிடந்த மண் குவியல்களை அகற்ற வலியுறுத்தியுள்ளதோடு சாலை பணியை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

