ADDED : பிப் 08, 2024 06:37 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்களில் கிடை மாடுகளை மேய்ப்பவர்கள், கிராமத்தினருக்கு இலவசமாக பசும் பால் வழங்கி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், ஆண்டு தோறும் மானாவாரி, ஆற்று பாசனம் மூலம் ஒரு போக நெல் சாகுபடி செய்கின்றனர். ஒரு போக சாகுபடிக்கு பின் நெல் வயலில் விளைந்துள்ள நெற்பயிர்களை அறுவடை செய்து விடுவர். அதற்கு பின் வயல்களில் புற்களும், அறுவடை செய்த நெல் பயிர்களும் வளர்ந்து கிடக்கும். இந்த பயிர்களை கால்நடைகளுக்கு வழங்கும் நோக்கில், மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தாராபட்டியை சேர்ந்த கால்நடை உரிமையாளர்கள் தற்போது, சிவகங்கை அருகே பனையூர், ஒக்கூர், மலம்பட்டி, கீழப்பூங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கிடை மாடுகளை' அழைத்து வந்து, மேய்ச்சல் நிலத்தில் மேய்ச்சலுக்காக விடுகின்றனர். சோழவந்தானில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை அழைத்து வந்துள்ளனர்.
தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் 6 மாதங்கள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு, அதன் மூலம் வரும் வருமானம் பெறுகின்றனர். கிடை மாடுகளாக' அழைத்து செல்லும் கால்நடைகளில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டிற்கு தயாராகும் காளைகளை காளை வளர்க்கும் ஆர்வலர்களுக்கு விற்று விடுகின்றனர். இக்கிடைமாடு' கூட்டத்தில் பசு மாடுகளும், கன்றுகளுடன் வளர்கின்றன. நெல் வயலில் இரவு தங்கும் பசுக்களின் பாலை கரந்து, இலவசமாக அப்பகுதி மக்களுக்கு வழங்குகின்றனர்.
2 ஏக்கருக்கு ரூ.1300 கூலி
கால்நடை உரிமையாளர் கே.மகேஷ் கூறியதாவது, சொந்த ஊர் சோழவந்தான் அருகே தாராபட்டி. அப்பகுதியில் வைகை ஆற்றில் தண்ணீர் வருவதால், மூன்று போகம் விளைச்சல் நடக்கும். சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே ஒரு போக சாகுபடி செய்து, நிலத்தை மேய்ச்சல் நிலமாக வைத்துவிடுவர். அறுவடைக்கு பின் வயலில் உள்ள புற்கள், நெற்பயிர் வேர்களை சாப்பிட கால்நடைகளை இங்கு அழைத்து வருகிறோம். இரவில் வயல்களில் கிடைபோட்டு' அடைக்க, நில உரிமையாளர் 2 ஏக்கருக்கு ரூ.1,300 கட்டணம் தருவார். கால்நடைகள் போடும் சாணம் மூலம் நிலத்திற்கு உரமாக கிடைக்கும். அது போன்று பசு மாட்டு பாலை விற்கமாட்டோம். கிடைபோட்டு தங்கியுள்ள கிராம மக்களுக்கே இலவசமாக தந்து விடுவோம். எக்காரணத்தை கொண்டும் கேரளாவிற்கு கால்நடைகளை அடிமாடுகளாக அனுப்புவதில்லை என்றார்.

