/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவனம் கிடைக்காத அவலம்!
/
கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவனம் கிடைக்காத அவலம்!
ADDED : ஏப் 14, 2024 11:01 PM
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகாவில் மடப்புரம்,மணல்மேடு, பெத்தானேந்தல், கீழடி, கொந்தகை, அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடுகள் அதிகளவில் வளர்க்கப் படுகின்றன.
காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு திருப்புவனம் பகுதியில் இருந்து தான் அதிகளவுவாக 8 ஆயிரத்து 500 லிட்டர் பால் தினசரி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கறவை மாடுகள் ஏராளமாக வளர்த்தாலும் கறவை மாடுகள் வளர்ப்பதற்கு அரசு சார்பில் எந்த விதமான சலுகைகளும் கிடைப்பதில்லை என கறவை மாடு வளர்ப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு கறவை மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. கடந்த சில வருடங்களாக புண்ணாக்கு, தவிடு, துாசி உள்ளிட்டவற்றின் விலை நான்கு மடங்காக உயர்ந்து விட்டது. பால் கூட்டுறவு சங்கங்களின் மூலம் புண்ணாக்கு வழங்கப்படுவது உண்டு, அதிலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் அனைவருக்கும் வழங்கப்படுவதும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
20 வருடங்களுக்கு முன்பு வரை ரைஸ்மில்லில் நெல் அரைக்கும் போது கிடைக்கும் தவிடு விற்பனை செய்யப்பட்டது. தற்போது நவீன அரிசி ஆலைகள் வந்து விட்டதால் தவிடு கிடைப்பதில்லை. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல்களையும் விவசாயிகள் விற்பனை செய்து விடுவதால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவனம் கிடைப்பதில்லை.
கறவை மாடுகள் வளர்ப்பவர்கள் கூறுகையில்:
கறவை மாடுகளுக்கு தினசரி புண்ணாக்கு, தவிடு, ஆகியவற்றுடன் தீவனம் வழங்க வேண்டும், மாடுகள் பால் கறக்கும் போது அதிகளவு புண்ணாக்கு தேவைப்படும், கடந்த சில வருடங்களில் புண்ணாக்கு விலை கிடு கிடு வென உயர்ந்து விட்டது.
வீடுகளில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து மாடுகள் வரை வளர்ப்போம், மூன்று மாடுகளுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் மூன்று மூடை புண்ணாக்கு தேவைப்படும்.
மழை காலங்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாது, அப்போது கூடுதலாக தேவைப்படும், ஏற்கனவே ரேஷன் அரிசியை சமைத்து வழங்கி வந்த போது கறவை மாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அவற்றை வழங்கக்கூடாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். எனவே தற்போது ரேஷன் அரிசியை அரைத்து மாவாக்கி அவற்றை தண்ணீருடன் கலந்து வழங்கி வருகிறோம், இதன் மூலம் புண்ணாக்கின் தேவை வெகுவாக குறைந்து வருகிறது.
வேறு வழியின்றி ரேஷன் அரிசி மாவை வழங்கி வருகிறோம், கறவை மாடுகளை பால் கறக்காத காலங்களிலும் முறையாக பராமரிக்க வேண்டும், தற்போது மேய்ச்சல் நிலங்களும் குறைந்து விட்டதால் வீட்டிலேயே அதிகளவு உணவு வழங்க வேண்டியுள்ளது, என்றனர்.
கால்நடை மருத்துவர்கள் கூறுகையில்: 100 கிலோ கலப்பு தீவனங்களுடன் 5 கிலோ அரிசி மாவு கலந்து கொடுக்கலாம், அளவுக்கு அதிகமாக அரிசி மாவை கலந்தால் மாடுகளுக்கு செரிமான கோளாறு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது, என்றனர்.

