ADDED : டிச 18, 2025 01:41 AM

சாணார்பட்டி: காரைக்குடியில் இருந்து கொடைக்கானல் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து, சக்கரம் கழன்று ஓடியது.
காரைக்குடியில் இருந்து, கொடைக்கானலுக்கு நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில், 45க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை பகுதிக்கு வந்த போது, பஸ்சின் முன்பக்க டயர் ஒன்று வெடித்து, கழன்று தனியாக ஓடியது.
நிதானமான வேகத்தில் பஸ் வந்ததால், உடனே பஸ் நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கொடைக்கானல் மலையில், பஸ் ஏறும்போது, டயர் வெடித்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என பயணியர் கூறினர்.
அரசு பஸ்கள் முறையான பராமரிப்பு இல்லாததால், அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நிற்பது தொடர்கிறது. போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சக்கரம் கழன்ற அரசு பஸ்

