/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் துார்வாரும் பணியை துவக்கிய கலெக்டர்
/
சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் துார்வாரும் பணியை துவக்கிய கலெக்டர்
சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் துார்வாரும் பணியை துவக்கிய கலெக்டர்
சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் துார்வாரும் பணியை துவக்கிய கலெக்டர்
ADDED : செப் 17, 2024 05:07 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக, நேற்று கலெக்டர் ஆஷா அஜித் சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்பினை அகற்றி, துார்வாரும் பணியை துவக்கி வைத்தார்.
சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் உள்ள அலவாக் கண்மாயில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1919 ம் ஆண்டில் தடுப்பணை கட்டப்பட்டது. பெரியாறு, வைகை அணையில் இருந்து ஒரு போக சாகுபடிக்கு திறக்கப்படும் உபரி நீர் நாவினிபட்டி கண்மாய் வழியாக அலவாக்கோட்டை கண்மாயை நிரப்பும்.
அங்கிருந்து சருகணி ஆற்றில் சென்று, அக்கால கட்டத்தில் 20 கண்மாய்களை நிரப்பி, 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
காலப்போக்கில் சருகணி ஆற்றின் வழித்தடத்தை ஆக்கிரமித்து விட்டனர். இதனால், ஆற்றின் வழித்தடம் சுருங்கி, ஓடை போல் காட்சி அளித்தது.
300க்கும் மேற்பட்ட கிராமங்களில் சருகணி ஆற்றின் மூலம் கிடைத்த நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டன. எனவே இந்த ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரினால் மீண்டும் விவசாயம் செழிக்கும் என சருகணி ஆறு மீட்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் முயற்சித்தார்.
அப்பகுதியில் உள்ள கிராம ஊராட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும் என அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதன் பயனாக கலெக்டர் தலைமையில் பொதுப்பணி, வருவாய் துறையினர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, சருகணி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார உத்தரவிட்டார்.
சூடம் காண்பித்து துவக்கிய கலெக்டர்
முன்னதாக டிஜிட்டல் ஜி.பி.எஸ்., கருவி மூலம் சருகணி ஆறு ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்து, அவற்றை அகற்ற திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக நேற்று அலவாக்கோட்டை கண்மாய் அருகே சருகணி ஆற்றில் துார்வாரும் பணிக்காக, வந்த மண் அள்ளும் இயந்திரம் முன் தேங்காய், பழம் வைத்து சூடம் காண்பித்து கலெக்டர் ஆஷா அஜித் பூஜை செய்து, துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர்கள் முத்துராமலிங்கம், பிரியதர்ஷினி, டாக்டர் சேதுகுமணன், ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன், முல்லை பெரியாறு, வைகை பாசன சங்க பொது செயலாளர் ஆதிமூலம், மாணிக்கவாசகம், ஒன்றிய கவுன்சிலர் நதியா, அலவாக்கோட்டை, பெருங்குடி, நகரம்பட்டி ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
23 கி.மீ., துாரம் ஆக்கிரமிப்பு அகற்றம்
அலவாக்கோட்டை முதல் பெருங்குடி, நகரம்பட்டி, வீழனேரி, பனங்குடி வழியாக சருகணி வரை செல்லும் 23 கி.மீ., துாரமுள்ள ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை டிஜிட்டல் ஜி.பி.எஸ்., கருவி மூலம் அளவீடு செய்து, முழுமையாக அகற்றி ஆற்றை காக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

