ADDED : ஏப் 04, 2024 11:26 PM
சிங்கம்புணரி : சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து தி.மு.க., அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எஸ்.புதூர் ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரான்பட்டி, கணபதிபட்டி, புழுதிபட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது: நாம் செலுத்தும் ஒவ்வொரு ஓட்டும் நியாயத்துக்கு துணை போகும் ஓட்டாக இருக்க வேண்டும். பிரதமர் மோடி 2014ல் தேர்தல் வாக்குறுதியாக, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொருவரது கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னார், ஆனால் செய்யவில்லை. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்திவிட்டார்.
3 ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார். பிரசாரத்தில் தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

