/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கோயில் மாடு
/
பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கோயில் மாடு
ADDED : ஏப் 04, 2024 05:04 AM

திருப்புவனம், : திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாக கோயில் மாடுகள் கூட்டத்தில் புகுந்து ஓடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. தினசரி மற்றும் வாரச்சந்தையில் மீதமாகும் காய்கறி மற்றும் பழ கழிவுகளை உண்டு வாழும் இவைகளால் தினசரி பொதுமக்கள் அச்சத்துடனேயே ரோட்டில் நடமாட வேண்டியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ள நிலையில் பிரசார கூட்டத்திலும் புகுந்து பலரையும் முட்டி மோதி காயப்படுத்தி வருகிறது. நடிகை விந்தியா பிரசார கூட்டம், ஜி.கே. வாசன் பிரசார கூட்டம் என தொடர்ச்சியாக கோயில் மாடுகள் புகுந்து பொதுமக்களை காயப்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்ட பக்தர்கள் கூட்டத்தில் கோயில் மாடுகள் புகுந்து ஓடியதில் பக்தர்கள் பலரும் காயமடைந்தனர்.
கோயில் மாடுகளை அப்புறப்படுத்த கோரி பலமுறை அரசியல் கட்சிகள், வர்த்தகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

