ADDED : ஏப் 23, 2024 04:20 AM
இன்று கோட்டை மாரியம்மன்
கோவிலில் சிறப்பு வழிபாடு
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இன்று காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு, மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது.
மாலை, 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு, 7:00 மணிக்கு தங்க ரத புறப்பாடு, 7:45 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 8:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
சேலத்தில் 41.6 டிகிரிசுட்டெரிக்கும் வெயில்
சேலம்: சேலத்தில் நேற்றைய வெயில் அளவு, 41.6 டிகிரி செல்சியஸ். இது பாரன்ஹூட் அளவில், 106.1 டிகிரி. இது இயல்பை விட, 4.2 டிகிரி செல்சியஸ் அதிகம். வெயில் அதிகரிப்பால் காற்றின் ஈரப்பதம், 24 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. அதனால் காலை முதல் அனல் தகித்தது. மக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்தடையால் வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். காற்றும் அனலாக வீசியதால், புழுக்கம் அதிகம் காணப்பட்டது. இரவிலும், புழுக்கம் நீடித்தது. அதனால் பெரும்பாலான மக்கள் துாக்கத்தை தொலைத்து, நிம்மதியை இழந்தனர்.
பைக் மீது கார் மோதியவிபத்தில் மெக்கானிக் பலி
காரிப்பட்டி: சேலம் அருகே கிச்சிப்பாளையத்தை சேர்ந்த லாரி மெக்கானிக் சந்துரு, 45. அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சுப்பிரமணி, 40. இருவரும் கடந்த, 20 மாலை, 4:00 மணியளவில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்காக, அயோத்தியாப்பட்டணம் அடுத்த பூவனுார் பகுதிக்கு 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் சென்றுள்ளனர். சுப்ரமணி பைக் ஓட்டியுள்ளார்.
மேட்டுப்பட்டி தாதனுார் அருகே, அரூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருவண்ணாமலை பகுதியிலிருந்து சேலம் நோக்கி வந்த கார், பைக் மீது மோதியது. காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் படுகாயமடைந்த சந்துரு, சுப்பிரமணி இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் சிகிச்சை பெற்று வந்த சந்துரு, நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உருமாரியம்மன் கோவிலில்இன்று கும்பாபிேஷகம்
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா, பொட்டியபுரம் கட்டிக்காரனுார் உருமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கடந்த, 15ல் முகூர்த்தகால் நடப்பட்டது. நேற்று காலை, மூப்பனார் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் துவங்கியது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேளதாளத்துடன் சென்றனர். இன்று இரண்டாம் கால யாக பூஜை முடிந்தவுடன், காலை, 9:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறவுள்ளது.
ஸ்டேஷனில் மயங்கியஏட்டு உயிரிழப்பு
பனமரத்துப்பட்டி-
போலீஸ் ஸ்டேஷனில் மயங்கிய ஏட்டு உயிரிழந்தார்.
சேலம், ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு அரிதாஸ், 59. இவர், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஓராண்டாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் ஸ்டேஷனில் இரவு பணியில் இருந்தார். அதிகாலை, 3:00 மணிக்கு மயங்கி நிலையில் கிடந்த அவரை, சக போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 4:00 மணிக்கு உயிரிழந்தார்.
இது குறித்து, போலீசார் கூறுகையில்,''இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஆஞ்சியோ செய்து, தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்' என்றனர்.

