/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்ப்பாட்டம் பல்கலை ஊழியர்களுக்கு 'மெமோ'
/
ஆர்ப்பாட்டம் பல்கலை ஊழியர்களுக்கு 'மெமோ'
ADDED : மார் 01, 2024 01:05 AM
ஓமலுார்:பெரியார் பல்கலை துணைவேந்தரை கண்டித்து, பல்கலை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் முதல்கட்டமாக, 33 பேருக்கு, 'மெமோ' வழங்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலை (பொறுப்பு) முன்னாள் பதிவாளரான தங்கவேல் மீது பல்வேறு புகார் எழுந்த நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விசாரித்தனர்.
கடந்த, 7ல், உயர் கல்வித்துறை அரசு முதன்மை செயலர் கார்த்திக், அவர் மீது நடவடிக்கை எடுக்க, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் தங்கவேல், கணினி துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மீண்டும் அரசு முதன்மை செயலர், தங்கவேல் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுத்து, அந்த உத்தரவை அரசுக்கு அனுப்ப கடிதம் அனுப்பியிருந்தார்.
இதன்படி நடவடிக்கை எடுக்காத துணைவேந்தரை கண்டித்து நேற்று முன்தினம் காலை, பல்கலை வளாகத்தில், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தொழிலாளர் சங்க பொதுச் செயலர் சக்திவேல் கூறுகையில், ''முன்னாள் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசு இருமுறை கடிதம் அனுப்பியும், துணைவேந்தர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் அவரும் அதில் உடந்தை.
நடவடிக்கை எடுக்கவிட்டால் அறவழியில் தொடர் போராட்டம் நடக்கும்,'' என்றார். இதே கருத்தை, பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதனும் தெரிவித்தார்.
இதையடுத்து தற்போதைய பொறுப்பு பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி நேற்று முன்தினம் அனுப்பிய உள் சுற்றறிக்கையில், 'தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர்கள், முன் அனுமதியின்றி போராட்டங்களில் ஈடுபட்டால், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே பல்கலை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் சங்கத்தினர் பணி முடிந்து மாலையிலும் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதனால் விதிமீறி போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி முதல்கட்டமாக, 33 பேருக்கு பல்கலை நிர்வாகம், விளக்கம் கேட்டு மெமோ வழங்கியுள்ளது.
இதற்கு தமிழ்நாடு பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாலமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

