/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிக்கரை சாலையில் பாளமாக வெடித்து விரிசல்
/
ஏரிக்கரை சாலையில் பாளமாக வெடித்து விரிசல்
ADDED : டிச 21, 2024 01:24 AM
வீரபாண்டி, டிச. 21-
சேலம் மாவட்டம் சீரகாபாடியில் இருந்து கடத்துார் வழியே எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, ஆட்டையாம்பட்டி பகுதிகளுக்கு, கடத்துார் ஏரிக்
கரையில் அபாய வளைவு கொண்ட தார்ச்சாலையில் தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. ஆனால் ஏரிக்கரை சாலை குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், 4 ஆண்டுக்கு முன்பு ஏரி உள்ள பகுதியில், 10 அடி வரை சாலையை விரிவாக்கம் செய்தனர்.
தொடர்ந்து கடந்தாண்டு முதல், ஏரியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டும் பணி, பகுதி, பகுதியாக நடந்து வருகிறது. 70 சதவீத தடுப்புச்சுவர் கட்டும் பணி முடிந்துள்ள நிலையில், தடுப்புச்சுவர் இல்லாத பகுதியில், விரிவாக்கம் செய்து, புதிதாக அமைத்த சாலையில் ஆங்காங்கே பாளம் பாளமாக வெடித்து, விரிசல் விழுந்துள்ளது. இதில் மழைநீர் புகுந்து அரிக்கப்பட்டால், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி முழுதும், ஏரிக்குள் சரிந்து விழுவதோடு பாதசாரிகள், வாகன ஓட்டிகள், கால்நடைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
அதனால் நெடுஞ்சாலைத்துறையினர், உடனே சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்ய வேண்டும். மேலும் விரிவாக்கம் செய்துள்ள ஏரிக்கரை முழுதும் தடுப்புச்
சுவரை முழுமையாக கட்டி முடித்து, தார்ச்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

