/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வல்லக்குளத்தில் வைரஸ் காய்ச்சல் மக்கள் பாதிப்பு
/
வல்லக்குளத்தில் வைரஸ் காய்ச்சல் மக்கள் பாதிப்பு
ADDED : பிப் 06, 2024 11:21 PM
சிக்கல்: -சிக்கல் அருகே சொக்கானை ஊராட்சி வல்லக்குளத்தில் வைரஸ் காய்ச்சலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சியில் 2000 மக்கள் வசிக்கின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய் நிரம்பி உள்ளது. வல்லக்குளம் கண்மாய்க்குள் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கண்மாய் நீர் ஆழ்துளைக் கிணறுகளுக்குள் புகுந்துள்ளதால் அவற்றை முறையாக குளோரினேசன் செய்யாமல் ஐந்து மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி உள்ளனர்.
அவற்றைப் பருகிய பத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் அவதிக்குள்ளாகினர். வல்லக்குளம் நதீர் அகமது 19, தாஹீது ஹனீப் 40, ராஜிஹா 35, மும்தாஜ் 55, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கை, கால், முகம் உள்ளிட்டவைகளில் வீக்கம் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். வல்லக்குளம் கிராம மக்கள் கூறியதாவது:
சொக்கானை ஊராட்சியில் ஐந்து மேல்நிலைத் தொட்டியை முறையாக சுத்தம் செய்யாமல் நேரடியாக தண்ணீரை விநியோகிக்கின்றனர். குளோரினேசன் செய்யப்படாத நீரை பயன்படுத்துவதால் மர்ம காய்ச்சல் பாதிப்பால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் வினியோகம் இல்லை. இதற்கான தண்ணீர் கட்டணம் ஊராட்சி நிர்வாகம் கட்டுகிறது.
எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரினேசன் செய்து பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றனர்.

