/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சித்திரை திருவிழா நடக்கும் வைகை ஆற்றுப் பகுதியில் தேங்கிய கழிவுநீர்
/
சித்திரை திருவிழா நடக்கும் வைகை ஆற்றுப் பகுதியில் தேங்கிய கழிவுநீர்
சித்திரை திருவிழா நடக்கும் வைகை ஆற்றுப் பகுதியில் தேங்கிய கழிவுநீர்
சித்திரை திருவிழா நடக்கும் வைகை ஆற்றுப் பகுதியில் தேங்கிய கழிவுநீர்
ADDED : டிச 23, 2025 05:34 AM

பக்தர்கள், பொதுமக்கள் குமுறல்
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆறு சித்திரை திருவிழா நடக்கும் பகுதியில் கழிவு நீர் தேங்கி உள்ள சூழலில் பக்தர்கள் உட்பட பொதுமக்கள் குமுறலில் உள்ளனர்.
மதுரை துவங்கி பரமக்குடி வரை வைகை ஆறு என்றாலே சித்திரை திருவிழா ஞாபகத்திற்கு வரும். அந்த வகையில் மதுரை, மானாமதுரை மற்றும் பரமக்குடி வைகை ஆற்றில் ஆண்டுதோறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.
இந்நிலையில், ஒட்டுமொத்த ஆறும் மணல் இன்றி கழிவு நீர் விடப்படும் சூழலில் சீமைக்கருவேல மரங்கள், நாணல்கள், புற்கள் முளைத்து ஆற்றின் தடம் மறைந்துள்ளது.
பரமக்குடியில் திருவிழா நடக்கும் வைகை ஆற்றுப்பகுதி பாதுகாக்கப்பட்டு வந்த சூழலில் கடந்த சில மாதங்களாக கவனிப்பாரின்றி உள்ளது.
பெருமாள் கோயில் படித்துறை துவங்கி கவுரி அம்மன் கோயில் படித்துறை மற்றும் வைகை ஆறு தரைப்பாலம் இரு புறங்களிலும் கழிவு நீர் தேங்கியுள்ளது.
காக்கா தோப்பு பெருமாள் கோயில் முன்பும் ஒட்டுமொத்த கழிவுநீரும் கலக்கும் நிலையில் வரும் நாட்களில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தொற்றுநோய் அச்சத்தில் உள்ளனர். இத்துடன் ஊற்று நீருக்கு ஆதாரமாக உள்ள வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் அருகிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் அனைத்தும் துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது.
முத்தாலம்மன் கோயில் பங்குனி மற்றும் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வைகாசி விழாக்கள் ஆற்றில் நடப்பது வழக்கம்.
ஆகவே ஒட்டுமொத்த மக்களின் பொழுதுபோக்கு மற்றும் நீர் ஆதாரமாக உள்ள வைகை ஆற்றைக் காக்க பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

