/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கோயில், குடியிருப்புகள் மிதக்கிறது! போதிய வடிகால் வசதியின்றி மக்கள் சிரமம்
/
ராமநாதபுரத்தில் கோயில், குடியிருப்புகள் மிதக்கிறது! போதிய வடிகால் வசதியின்றி மக்கள் சிரமம்
ராமநாதபுரத்தில் கோயில், குடியிருப்புகள் மிதக்கிறது! போதிய வடிகால் வசதியின்றி மக்கள் சிரமம்
ராமநாதபுரத்தில் கோயில், குடியிருப்புகள் மிதக்கிறது! போதிய வடிகால் வசதியின்றி மக்கள் சிரமம்
UPDATED : டிச 18, 2025 09:14 AM
ADDED : டிச 18, 2025 05:26 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம், அதனை சுற்றியுள்ள இடங்களில் நேற்று கனமழை பெய்தது. ரயில்வே பீடர் ரோடு, கீழக்கரை பாலம் பழைய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி குளம் போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பயணிகள், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ., முதல் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்கிறது. நேற்று முன்தினம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று அதிகாலையில் துவங்கிய கன மழை காலை 10:45 மணி வரை நீடித்தது. இதனால் ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், சந்தைக்கடை ரோடு, மதுரை ரோடு, பட்டணம்காத்தான், பாரதிநகர், சக்கரகோட்டை ஊராட்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் ரோடு, ரயில்வே பீடர் கீழக்கரை பாலம், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் செல்வதற்கான வடிகால் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
மழைநீர் குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கியதால் துர்நாற்றத்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமப் பட்டனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள், பணியாளர்கள் சிரமப்பட்டனர்.
வெளிபட்டணம் பாலசுப்பிரமணியசுவாமி கோயிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் மார்கழி வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
ராமநாதபுரம் நகர், பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றியும், வாய்க்கால் துார்வாரப்படாமல் கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட நகர், புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. எனவே மழைக்காலத்தில் தண்ணீரை ஊருணிகளுக்கு கொண்டு செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

