/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் வருது எய்ம்ஸ் ஆய்வுக்குழு மருத்துவ மாணவர்கள் போராட்டம் எதிரொலி
/
ராமநாதபுரம் வருது எய்ம்ஸ் ஆய்வுக்குழு மருத்துவ மாணவர்கள் போராட்டம் எதிரொலி
ராமநாதபுரம் வருது எய்ம்ஸ் ஆய்வுக்குழு மருத்துவ மாணவர்கள் போராட்டம் எதிரொலி
ராமநாதபுரம் வருது எய்ம்ஸ் ஆய்வுக்குழு மருத்துவ மாணவர்கள் போராட்டம் எதிரொலி
ADDED : ஏப் 17, 2024 01:09 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் பயிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி அடுத்தடுத்து போராட்டம் நடத்துவதன் எதிரொலியாக ஆய்வு செய்ய புதுடில்லி எய்ம்ஸ் ஆய்வுக்குழுவினர் அடுத்தமாதம் வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் ஒரு தளம் ஒதுக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் ஆண்டுக்கு 50 பேர் வீதம் 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லுாரி வளாகத்திற்குள் அவர்களுக்கு விடுதி வசதியுள்ளது.
ஆனால் கல்லுாரி மற்றும் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி மாணவர்கள் சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அடுத்தடுத்து போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி இயக்குனர் அனுமந்தராவ் நேற்று விசாரணை நடத்தினார்.
மாணவர்கள் அவரிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரியில் எய்ம்ஸ் தரத்திற்கு கல்வி கற்பிக்கப்படுவதில்லை. ஆய்வக வசதியும் முறையாக இல்லை. மருத்துவக் கல்லுாரியில் 2 மாணவர்களுக்கு ஒரு அறை என ஒதுக்க வேண்டும். ஆனால் 4 மாணவர்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்படுகிறது.
கல்லுாரி நுாலகங்கள் மாலை 6:30 மணியுடன் மூடப்படுவதால் மாணவர்கள் கல்லுாரியிலிருந்து திரும்பி வந்த பிறகு நுால்களை படிக்க முடியாமல் போகிறது. அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் முறையாக அனுமதி வழங்கப்படுவதில்லை.
வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவிலும் அனுமதி வழங்கப்படுவதில்லை. எய்ம்ஸ் உயர் தர மருத்துவக்கல்லுாரியில் இடம் கிடைத்தும் அதற்கான அங்கீகாரம் இல்லை.
மாநில மருத்துவக்கல்விக்கு இணையான கல்வி கூட கிடைக்கவில்லை. ஆந்திர மாநிலம் மங்களகிரி, நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரிக்கு மாற்றி மீதமுள்ள காலமாவது தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என்றனர்.
எய்ம்ஸ் இயக்குனர் அனுமந்தராவ் கூறியதாவது: மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்யப்படும். மங்களகிரி, நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி இயக்குனர்களுடன் பேசி இம்மாணவர்கள் கல்வியை தொடர வழிவகைகள் செய்யப்படும். அறுவை சிகிச்சை அரங்கு, வெளி நோயாளிகள் பிரிவில் அனுமதிப்பது தொடர்பாக மாநில மருத்துவக்கல்லுாரி நிர்வாகத்துடன் பேசப்படும்.
விடுதியில் இட நெருக்கடி இருப்பதால் வெளிக்கட்டடங்களை வாடகைக்கு எடுத்து மருத்துவ மாணவர்கள் தங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையில் போராட்டம் எதிரொலியாக புதுடில்லி எய்ம்ஸ் ஆய்வுக்குழு அடுத்த மாதம் ராமநாதபுரம் வருகிறது. மாணவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

