/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேத்தாண்டி வேடத்தில் நேர்த்திக்கடன்
/
சேத்தாண்டி வேடத்தில் நேர்த்திக்கடன்
ADDED : மார் 28, 2024 06:10 AM

கமுதி,: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு வினோத முறையில் பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு மார்ச் 15ல் கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தினமும் மூலவரான முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று குதிரை, யானை, ரிஷபம், அன்னப்பறவை, வெள்ளிக் குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அலங்காரம் செய்து அம்மன் வீதி உலா நடந்தது.
பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் ஊரணி கரையிலிருந்து உடல் முழுவதும் சேறு பூசி வேப்பிலையை கையில் ஏந்தி வினோத முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
பக்தர் மரகதவேல் கூறியதாவது: முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக விரதம் இருந்து சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தி வருகிறேன். இதனால் உடல் வெப்பம், அம்மை நோய் உட்பட பல்வேறு நோயில் இருந்து காத்துக்கொள்ளப்படுகிறது. உடலில் உள்ள நோய் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இதனால் தொடர்ந்து குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன்.
பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி, பூப்பெட்டி, கரும்பாலை தொட்டி எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேத்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கமுதி சத்திரிய நாடார் உறவின் முறை நிர்வாகிகள் செய்தனர்.

