/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த பாலத்தால் கிராம மக்கள் பாதிப்பு
/
சேதமடைந்த பாலத்தால் கிராம மக்கள் பாதிப்பு
ADDED : ஏப் 17, 2025 09:10 PM

பந்தலுார்; தேவாலா வாழவயல் அருகே, நீரோடையை கடக்க அமைத்த பாலம் சேதமடைந்தும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடத்தில் தேவாலா வாழவயல் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பில்லுக்கடை என்ற இடத்தில் இருந்து கீழ் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே பாயும் நீரோடையை கடக்க, நகராட்சி மூலம் சிறு பாலம் அமைக்கப்பட்டது. தரமற்ற நிலையில் அமைக்கப்பட்ட இந்த பாலம் தற்போது உடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால், இந்த பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் கொண்டு செல்ல முடியாமலும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை அழைத்து வர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'இந்த சாலையில் உள்ள பாலம் பழுதடைந்தது குறித்து, நகராட்சி நிர்வாகத்திலும் பலமுறை நேரில் புகார் தெரிவித்தும் இதுவரை தீர்வு காணாமல் இருப்பதால் சிரமப்பட்டு வருகிறோம். உயிரிழந்தவர்களின் உடலை கூட எடுத்து செல்ல முடியாத நிலையில் சிரமப்படும் சூழலில், நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் பாலத்தை சீரமைத்து தர புதிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்,' என்றனர்.

