/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் மனித- விலங்கு பிரச்னையால் அதிகரிக்கும் கூண்டு புலிகள்!: தொலை நோக்கு திட்டமில்லாததால் தொடரும் சோகம்
/
மலையில் மனித- விலங்கு பிரச்னையால் அதிகரிக்கும் கூண்டு புலிகள்!: தொலை நோக்கு திட்டமில்லாததால் தொடரும் சோகம்
மலையில் மனித- விலங்கு பிரச்னையால் அதிகரிக்கும் கூண்டு புலிகள்!: தொலை நோக்கு திட்டமில்லாததால் தொடரும் சோகம்
மலையில் மனித- விலங்கு பிரச்னையால் அதிகரிக்கும் கூண்டு புலிகள்!: தொலை நோக்கு திட்டமில்லாததால் தொடரும் சோகம்
ADDED : டிச 16, 2025 05:25 AM

கூடலுார்: 'மலை பகுதிகளில் ஊருக்குள் முகாமிட்டு கால்நடைகளை புலி தாக்க துவங்கும் போதே வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம், மனித- விலங்கு மோதலை கட்டுப்படுத்த முடியும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்பு நோக்கி வரும் சில புலிகள், உணவுக்காக கால்நடைகளை வேட்டையாடுவதுடன், மனிதர்களையும் தாக்கி கொன்று வருவது தொடர்கிறது.
அதன்படி, மாவட்டத்தில் கடந்த, 11 ஆண்டுகளுக்குள், மனிதர்களை தாக்கி கொன்ற, மூன்று புலிகளை, உயிருடன் பிடிக்க முடியாத சூழலில் வனத்துறை; போலீசார் சுட்டு கொன்றனர். ஒரு புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, மைசூரில் உள்ள புலிகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மாவனல்லா பகுதியில், 60 வயது பெண்ணை கொன்ற சம்பவம் தொடர்பாக, 14ம் தேதி கூண்டில் சிக்கிய, 15 வயது ஆண் புலியை, வண்டலுார் உயிரின பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர். தேவர்சோலை பகுதியில், 30 மாடுகளை தாக்கி கொன்ற, 3 வயது ஆண் புலி, மட்டும் மனிதர்களை தாக்கும் முன்பு, கூண்டில் சிக்கியதால் முதுமலை வனத்தில் விடுவித்தனர்.
மக்களின் குற்றச்சாட்டு கிராம மக்கள் கூறுகையில், 'இத்தகைய சம்பவங்களின் போது, வனத்தை ஒட்டிய கிராம புறங்களுக்கு வரும் சில புலிகள், மாடுகளை தாக்கும் போதே, மக்கள் தகவல் தெரிவித்தும், உடனடி நடவடிக்கை இல்லாததால், அவைகள் மனிதர்களை தாக்கி கொல்லும் சூழல் உருவாகிறது. இதனை தடுக்க குடியிருப்பை ஒட்டிய தனியார் இடங்கள், பராமரிப்பில்லாத தேயிலை தோட்டங்களை அகற்றுவதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,' என்றனர்.
மசினகுடி 'ஐபான்' விலங்கு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் நைஜில் கூறியதாவது:
வாழ்விடம் தொடர்பாக ஆண் புலிகளுக்கு ஏற்படும் சண்டையின் போது தோல்வியடையும் புலி; தாயை பிரிந்த சில இளம் புலிகள்; வயது முதிர்ந்த புலிகள் குடியிருப்புகளை ஒட்டிய அல்லது பராமரிப்பு இல்லாத தனியார் இடங்கள், தேயிலை தோட்டங்களில் உள்ள முற்புதர்களில் முகாமிடும். அவற்றின் உணவுக்காக அவ்வப்போது கால்நடைகளை தாக்குவது வழக்கம். இது குறித்த தகவல் கிடைத்தவுடன், வனத்துறையினர் ஆய்வு செய்கின்றனர். மக்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.
எனினும், அது போதுமா னதாக இல்லாததால், மனிதர்கள்; புலிகளுக்கு சில நேரங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால், பல புலிகள் 'சிறை' வாசம் அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வரும் காலங்களில் மனித உயிர்கள்; யானை, புலி போன்ற வன விலங்குகளின் உயிருக்கும், வாழ்விடத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தொலை நோக்கு திட்டம் அவசியமாக உள்ளது. அதற்கு, 'ஏஐ' போன்ற அதிநவீன தொழிற் நுட்பங்களை, தற்போது உள்ளதை விட, கூடுதலாக பயன்படுத்த வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கினால், மலையில் ஏற்படும் மனித- விலங்கு மோதலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

